Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 8-வது முறை களம் இறங்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் களம் காண்கிறார். சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 8-வது முறையாக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பொதுமக்கள் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கோடு இருப்பவர். இவரது தந்தை துரைராஜ் தி.மு.கவில் ஆரம்ப கால உறுப்பினராக இருந்து 1968ம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு முதலாவது வார்டு கவுன்சிலராக மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையால் தேர்வு செய்யப்பட்டவர். பி.எஸ்.சி, பி.எல் படித்துள்ள டி.ஜெயக்குமார் அ.தி.மு.கவில் கழக தலைமை நிலைய செயலாளர், மாநில மீனவர் பிரிவு செயலாளர், மாநில மாணவரணி செயலாளர், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர், மாவட்டக் கழக செயலாளர், தொகுதி தலைவர், இளைஞரணி துணைத்தலைவர், கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர், கழக அமைப்புச் செயலாளர், வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் என்று பல பதவிகள் வகித்துள்ளார்.

அமைச்சரவையில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலம், வனம், முன்னாள் ராணுவத்தினர் நலன், எரிசக்தி, சட்டம், தகவல் தொழில்நுட்பவியல், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை, திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, சட்டமன்ற எதிர்க்கட்சி பொருளாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா, அலுவல் ஆய்வுக் குழு உறுப்பினர் , காமன்வெல்த் உறுப்பினர், சென்னை துறைமுக பொறுப்புக் கழக டிரஸ்டி என்று அதிகமான அமைச்சரவை இலாகாக்கள் மற்றும் பொறுப்புகள் வகித்துள்ளார்.

1982ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசியலில் அடி எடுத்து வைத்த அதே ஆண்டில் அவரை நேரில் சந்தித்து, அவரது பாதையில் நடப்பது தமது அரசியல் நிலைப்பாடு என்று உறுதி பூண்டு அதை இன்று வரை கடைபிடித்து வருகிறார். கழகத்திற்காக போராட்டங்களில் ஈடுபட்டு ஏழு முறை சிறை சென்று இருக்கிறார். 1991ம் ஆண்டு ஜெயலலிதாவால் ராயபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக களம் இறக்கப்பட்டு முதல் முறையிலேயே அபார வெற்றி பெற்று இளம் வயதிலேயே மீன்வளம், உட்பட பல்வேறு துறைகளை கையாளும் அளவுக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றார்.

மின்சாரம், சட்டம், தகவல் தொழில்நுட்பம் முதலிய துறைகளின் அமைச்சராக திறம்பட செயலாற்றி தமிழ்நாட்டை தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக செய்த பெருமைக்கு சொந்தக்காரர். ஜெயக்குமாரின் உழைப்பு, சட்டமன்ற அனுபவம், மக்களிடம் உள்ள நெருக்கம் ஆகியவற்றை கண்ட ஜெயலலிதா, சட்டமன்ற பேரவை தலைவராக (சபாநாயகராக) நியமனம் செய்தார். அவையில் அனைவரையும் அரவணைத்தும், அவையை நடுநிலைமையுடன் கொண்டு செல்வதிலும் தனி முத்திரை பதித்தார்.

2016ஆம் ஆண்டு ராயபுரம் தொகுதியில் இருந்து ஐந்தாவது முறையாக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தேர்வு செய்யப்பட்டு மீன்வளம், அரசு பணியாளர் நலம், நிதி மற்றும் திட்டம் வளர்ச்சித் துறைகளை கையாண்டார். முதன் முறையாக நிதி அமைச்சராக, நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தாலும் மிகத் தெளிவாக அறிக்கையை சமர்ப்பித்தவர் என்ற பாராட்டை பெற்றார். இப்போது 8வது முறையாக அதே ராயபுரம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக களத்தில் நிற்கும் டி.ஜெயக்குமார் மண்ணின் மைந்தன், மக்கள் சேவகன் என்ற கோஷத்துடன் பிரசாரத்தில் குதித்து மக்கள் ஆதரவோடு அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்.