காவேரிப்பாக்கம்: ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் உத்தரவின்பேரில், காவேரிப்பாக்கம் அடுத்த பாணாவரம் போலீசார், பிள்ளையார்குப்பம் கூட் ரோடு பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் 2 பட்டா கத்திகள், 3 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தன. இதனையடுத்து கார் மற்றும் பட்டாக்கத்தி, நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரில் வந்த 4 பேரை விசாரித்ததில் அவர்கள் சோளிங்கர் தாலுகா அலித்தாங்கல் சஞ்சய்குமார்(22), சோளிங்கர் அடுத்த வெங்குப்பட்டு எம்ஜிஆர் நகர் ரஞ்சித்(22), சோளிங்கர் காமராஜர் நகர் மணி(19), வாலாஜாபேட்டை தாலுகா வேலம் கேகே நகர் குமரன் (20) என்பது தெரியவந்தது. ரவுடிகளான அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து சோளிங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



