கொய்யாவைத் தாக்கி அழிக்கக்கூடிய காரணிகளுள் வேர் முடிச்சு நூற்புழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்நூற்புழுக்கள் 0.8 முதல் 1.2 மி.மீ. நீளமுடைய உயிரினமாகும். இவை மற்ற நூற்புழு இனங்களைப் போலவே மண்ணில் உயிர் வாழ்ந்து செடியின் வேர்ப்பகுதியை அழித்துக் கணிசமான விளைச்சல் இழப்பை ஏற்படுத்திவிடும். இந்தியாவில் கொய்யாவைப் பல்வேறு நூற்புழுக்கள் அழித்தாலும், அவற்றில் வேர்முடிச்சு நூற்புழுக்கள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்நூற்புழுக்கள் கொய்யா மர வேரினைத் தாக்கி அழிப்பதோடு மட்டுமல்லாமல் வேர் அழுகலை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சை மற்றும் பாக்டீரியா நோய்க் கிருமிகளுடன் இணைந்து கூட்டுநோயை ஏற்படுத்திச் செடிகளுக்கு மிகுந்த பாதிப்பை உண்டாக்குகின்றன. இதனால் கொய்யா மரத்தின் நோய் எதிர்ப்புத்திறன் குறைந்து எளிதில் மற்ற நோய்களின் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகிறது. இந்நோய் குறித்தும், இதனைக் கட்டுப்படுத்துவது குறித்தும் மதுரை வேளாண் அறிவியல் நிலைய அலுவலர்கள் தெரிவித்த சில தகவல்கள்: வெப்பமான அல்லது மிதவெப்பமான காலநிலை கொண்ட இடங்களில் பயிரிடப்படும் கொய்யாவில் மெலாய்டோகைனி என்டிரோலோபி நூற்புழுக்களின் தாக்கம் அதிக அளவில் காணப்படும்.
வாழ்க்கை சுழற்சி
மெலாய்டோகைனி என்டிரோரோபி என்ற பெயர் கொண்ட இந்த வேர்முடிச்சு நூற்புழுக்களின் வாழ்க்கைச் சுழற்சி சராசரியாக ஒரு மாத காலம் ஆகும். இவை முட்டைகளை மண்ணில் இடுகின்றன. இம்முட்டைகளிலிருந்து வெளிவரும் இரண்டாம் நிலை நூற்புழுக்கள் வேரின் நுனிப்பகுதி வழியாக உள்ளே சென்று தாக்குதலை ஏற்படுத்துகின்றன. இதன் ஆயுட்காலம் 30 முதல் 40 நாட்கள் ஆகும். ஒரு முதிர்ந்த பெண் நூற்புழு குறைந்தது 650 முதல் 1500 எண்ணிக்கையிலான முட்டைகளை இடும்.
தாக்குதல் அறிகுறிகள்
வேர்முடிச்சு நூற்புழுக்கள் தாக்கிய மரங்களில் வாடல் மற்றும் இலை மஞ்சள் நிறமாதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். இது பார்ப்பதற்கு நீர் மற்றும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் ஏற்படும் அறிகுறிகள் போன்றே காணப்படும். மேலும் இந்நூற்புழு வேர்ப்பகுதியில் கடுமையான வேர் வீக்கத்தையும், வேர் முடிச்சுகளையும் ஏற்படுத்தும். பாதிப்புக்கு உள்ளான கொய்யா மரங்கள் வளர்ச்சி குன்றி காணப்படும். இலைகளின் ஓரங்களில் இளஞ்சிவப்பு நிறத் திட்டுக்கள் காணப்படும். நாளடைவில் மரத்தின் கிளைகளில் உள்ள இலைகள் உதிர்ந்து வெறும் கிளைகள் மட்டுமே எஞ்சி இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
* பொதுவாக நூற்புழுக்கள் உருப்பெருக்கியினால் மட்டுமே காணக்கூடிய உயிரினமாக இருப்பதால் கொய்யா நடவிற்கு முன் மண் பரிசோதனை செய்வது அவசியம்.
* நூற்புழுக்களால் பாதிக்கப்படாத ஒட்டுச் செடிகளைப் பயன்படுத்த வேண்டும். நூற்புழுக்கள் தாக்குதல் இல்லாத வயலில் பதியன் போட்ட கொய்யாச் செடிகளைப் பயன்படுத்த வேண்டும்.
* நூற்புழுக்கள் மரத்தின் வேர்ப்பகுதியைச் சுற்றியுள்ள மண்ணில் காணப்படுவதால் களைக்கொத்தியால் கொத்தி விட்டு, பின்பு நூற்புழுக்கொல்லியை இட்டு நீரைப் பாய்ச்ச வேண்டும்.
* ஒரு கிலோ உயிரியல் நூற்புழுக் கொல்லியான பர்பியூரியோசிலியத்தை 250 கிலோ தொழு உரத்துடன் கலந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மரத்தின் வேர்ப் பகுதியில் இட வேண்டும்.
* தாய்வான் பிங்க் லக்னோ 49 கொய்யா ரகங்கள் நூற்புழுத் தாக்குதலுக்கு உட்படுவதால் இந்தக் கொய்யா ரகங்கள் பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் கொய்யாச் செடிகளை நடவுக்கு தேர்ந்தெடுக்கும்போது வேர் முடிச்சுகள் இல்லாத செடிகளாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
*வேர் முடிச்சு நூற்புழுக்களின் தாக்குதல் மிகுதியாகக் காணப்பட்டால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு முட்டை ஒட்டுண்ணியான பர்பியூரியோசிலியம் 30 மி.லி. மற்றும் 10 கிராம் வெல்லம் இரண்டையும் கலந்து மரத்தின் வேர்ப் பகுதியில் ஊற்ற வேண்டும். இதை ஒரு மாத கால இடைவெளியில் நான்கு முறை பின்பற்ற வேண்டும்.
* ஒரு மரத்திற்குத் திரவ உயிரியல் நூற்புழுக் கொல்லியான பொக்கோனியா 60 மி.லி. வேர் பகுதியில் இடுவதன் மூலம் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
* நன்கு மக்கிய 1 கிலோ தொழு உரத்துடன் 60 கிராம் துகள் வடிவிலான உயிரியல் நூற்புழுக்கொல்லியான பொக்கோனியா அல்லது பர்பியூரியோசிலியம் 30 நாட்கள் இடைவெளியில் நான்கு முறை பயன்படுத்துவதன் மூலம் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
* இலைகள் மஞ்சள் நிறமடைந்து இலைகளின் ஓரத்தில் இளஞ்சிவப்பு நிறத்திட்டுக்கள் தோன்றும்போது கார்போஃபியூரான் 3 ஜி 60 கிராம் / ஒரு செடிக்கு என்ற அளவில் பயன்படுத்த வேண்டும்.

