‘உள்ளூர் போட்டிகளில் கண்டிப்பாக விளையாட வேண்டும்’ – ரோஹித், விராட் கோலிக்கு பிசிசிஐ அறிவுறுத்தல்!!
மும்பை: இந்திய கிரிக்கெட்டின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால், விஜய் ஹசாரே டிராபி போன்ற உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் ஜூன் 29, 2024-ல் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்தும், மே 2025-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றனர். தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர்கள் விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட பிசிசிஐ புதிய விதியை கொண்டு வந்துள்ளது. அதன்படி இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட விரும்பினால் விஜய் ஹசாரே டிராபியில் பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டுமானால் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 2025-26 விஜய் ஹசாரே டிராபியில் பங்கேற்பதை ரோஹித் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் விராட் கோலி பங்கேற்பது குறித்து எந்த தகவலும் உறுதியாகவில்லை.