சாலை சென்டர் மீடியன்களில் கொடிக் கம்பங்களை அமைக்கும் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு உறுதி
சென்னை: பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை 2025 ஏப்ரல் 28க்குள் அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக வழக்கு விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு ேநற்று மீண்டும் வந்தது.
அப்போது, தற்காலிகமாக கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, சாலைகளின் சென்டர் மீடியனில் கொடிக்கம்பங்கள் அமைக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்தும், சாலைகளின் நடுவில் சென்டர் மீடியன்களில் கட்சி பாரபட்சமின்றி அனைத்து கட்சிகளும் கொடிகம்பங்கள் அமைக்க அனுமதிக்கப்படுகிறது. அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
சென்னை அண்ணா மேம்பாலத்தில் ஆளுங்கட்சி கொடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அது குறித்த வீடியோ காட்சிகள் உள்ளது. இதுபோன்று தற்காலிகமாக கொடிக்கம்பங்கள் நடுவதற்கு அனுமதி அளித்த உத்தரவு ஏதாவது இருந்தால் அரசு தரப்பு சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், கொடிக்கம்பங்கள் அமைக்க அனுமதி அளித்தது தொடர்பாக எந்த உத்தரவும் இல்லை. அவை அனுமதி இன்றி அமைக்கப்பட்டவை. அவ்வாறு அனுமதி இன்றி கொடிக்கம்பங்கள் அமைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதைக்கேட்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்தார். இதற்கு பதிலளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், அனுமதி இன்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அவற்றை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை டிசம்பர் 3ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
