Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாலை வசதி இல்லாததால் பேருந்து சேவை நிறுத்தம்: மாணவர்கள், பொதுமக்கள் அவதி!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காயாங்குளம் கிராமத்திற்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக நாள்தோறும் ஐந்து முறை பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் பயனடைந்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஓராண்டாக காயாங்குளம் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும், சாலையின் இருபுறங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளதால், பேருந்துகள் அந்த வழியாகச் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஓராண்டாக காயாங்குளம் கிராமத்திற்கு நாள்தோறும் இயக்கப்பட்டு வந்த ஐந்து பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் காயாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, மற்றொரு பகுதியில் பேருந்தில் ஏறிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து போக்குவரத்துத் துறையினரிடம் பொதுமக்கள் பலமுறை தெரிவித்தபோது, சாலை வசதி சீரமைக்கப்பட்டால் மட்டுமே மீண்டும் பேருந்துகளை இயக்க முடியும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், சாலை சீரமைக்கப்படாததால் அவ்வப்போது வரும் பேருந்துகளும் பாதி வழியிலேயே திரும்பிச் சென்று விடுவதாகவும், சாலை மோசமாக இருப்பதே இதற்குக் காரணம் என பேருந்து ஓட்டுநர்கள் தெரிவிப்பதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.

எனவே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு காயாங்குளம் செல்லும் சாலையை உடனடியாக சீரமைத்து, சாலையோரங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, மீண்டும் பேருந்து சேவையை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், காயாங்குளம் கிராமத்தில் தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.