Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விலைவாசி உயர்வு மூலம் மக்களுக்கு ஹைவோல்டேஜ் ஷாக் கொடுக்கும் மோடி அரசு: காங்கிரஸ் தாக்கு

புதுடெல்லி: நடப்பாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவீதம் வளர்ச்சியை எட்டியதற்காக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நேற்று முன்தினம் தனது பாராட்டுக்களை தெரிவித்தார். இந்நிலையில், வீடு கட்டுவதற்கான மின்சாதன மூலப்பொருட்களின் விலை பெருமளவு உயர்ந்திருப்பதாக கூறும் ஊடக செய்தியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது: மோடி அரசு ஒவ்வொரு வாரமும் விலைவாசி உயர்வு எனும் புதிய, ஹைவோல்டேஜ் ஷாக்கை நாட்டுக்கு அளித்து வருகிறது. விலைவாசி உயர்வு என்பது இப்போது சமையலறையோடு நின்றுவிடவில்லை. வீடு கட்டுவது முதல் மின்சாதனப் பொருட்கள் வரை அனைத்து அம்சங்களிலும் ஏழை, நடுத்தர மக்கள் விலை உயர்வு எனும் ஹைவோல்டேஜ் ஷாக்கை உணர்கிறார்கள்.

செப்பு கம்பியின் விலை கிலோ ரூ.850ல் இருந்து ரூ.1,700 ஆகவும், அலுமினியத்தின் விலை கிலோ ரூ.350ல் இருந்து ரூ.650 ஆகவும் உயர்ந்துள்ளது. 1,000 சதுர அடி கொண்ட வீட்டிற்கு மின் இணைப்பு பணிகள் செய்வதற்கான செலவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக இரட்டிப்பாகி உள்ளது. சோலார் பேனல்களின் விலை 10-15 சதவீதம் அதிகரித்துள்ளது. மின்விசிறிகள், பால்ஸ் சீலிங் அமைப்பதற்கான செலவுகளும் அதிகரித்துள்ளது. அயர்ன் பாக்ஸ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களின் விலை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. எல்இடி மற்றும் ஹாலஜன் விளக்குகளின் விலையும் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. சுவிட்ச்கள், சாக்கெட்டுகள், மெயின் லைன் கேபிள்கள், டைல்ஸ்கள், வயரிங், தொழிலாளர்களின் கூலி வரை வீடு கட்டுவது தொடர்பான ஒவ்வொரு செலவும் அதிகரித்து வருகிறது.

அதிகார மமதை கொண்ட மோடி அரசு இந்த உண்மையை மறைத்து, புள்ளிவிவர வித்தைகள் மூலம் மக்களைத் திசைதிருப்பவே முனைப்பு காட்டுகிறது. போலிச் செய்திகளை உருவாக்குவதிலேயே மும்முரமாக இருக்கும் பிரதமர் மோடி, சாமானிய மக்களின் சொந்த வீடு கட்டும் கனவையே பறித்து விட்டார் என்று கூறி உள்ளார்.