நாடு முழுவதும் விலைவாசி உயர்வு மீண்டும் பெரிய பிரச்னையாக உருவாகி வருகிறது. குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் பாதித்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்தே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உருப்படியான நடவடிக்கைகள் எதுவுமில்லை. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதல் காரணமாக மீண்டும் விலைவாசி உயர்வு பொதுமக்களை துயரமடைய வைக்கிறது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை மாற்றம், வரி உயர்வு, நாணய மதிப்பு சரிவு, போக்குவரத்து செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் எரிபொருள் விலை தற்போது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. உலக சந்தை மாற்றங்கள் இந்தியாவில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதேபோல் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகளும் எரிபொருள் விலையை அதிகரிக்கின்றன. ரூபாயின் மதிப்பு டாலருடன் ஒப்பிடும்போது குறைவாக இருப்பதால், இறக்குமதி செலவும் அதிகரிக்கிறது. இதுவும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமாகிறது.
கடந்த 8 தினங்களில் 3 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு அரங்கேறியுள்ளது. சென்னை மாநகரில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.105ஐ தாண்டி காணப்படுகிறது. விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் மட்டுமின்றி, தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், லாரி உரிமையாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரின் செலவுகளும் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து கட்டணமும் சில இடங்களில் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் பல நகரங்களில் தனியார் பஸ்கள் கட்டணத்தை தற்போது உயர்த்தியுள்ளன.
ஆம்னி பஸ்களின் கட்டணமும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அதிகரித்து வருகிறது. காஸ் சிலிண்டர்கள் மற்றும் வர்த்தக சிலிண்டர்கள் விலை உயர்வால் ஓட்டல்களில் உணவு பண்டங்களின் விலையும் உயர்ந்துள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்வை காரணம் காட்டி தமிழகத்தின் பல காய்கறி சந்தைகளில் இப்போது காய்கறிகளின் விலையை ஏற்றிவிட்டனர். கத்தரிக்காய், தக்காளி, பாகற்காய் என உள்ளூரில் விளையும் காய்கறிகள் கூட கிலோ ரூ.50ஐ தாண்டி விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மளிகை பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஒன்றிய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. சர்வதேச சூழல்களை காரணம் காட்டும் ஒன்றிய அரசு, ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என புதிய தத்துவங்களை வார்த்து வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் சூரிய ஆற்றல் மின்சாரம், உயிரி எரிபொருள் உள்ளிட்ட மாற்று எரிசக்தி திட்டங்களை அதிகரிக்கவும் நடவடிக்கை இல்லை.
விவசாயிகள் டிராக்டர், மோட்டார் பம்ப், அறுவடை இயந்திரம் போன்றவற்றிற்கு டீசலை பயன்படுத்துகின்றனர். டீசல் விலை உயர்ந்தால் விவசாயச் செலவும் அதிகரிக்கிறது. இதனால் உற்பத்தி செலவு கூடுவதுடன், விவசாயிகளின் லாபமும் குறையும் சூழல் உருவாகியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை பொருளாதார பிரச்னையாக மட்டுமே கருத வாய்ப்பில்லை. பொதுமக்களின் வாழ்க்கை, தொழில், விவசாயம் மற்றும் நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கும் முக்கிய காரணியாக உள்ளது. எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.
