Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக பேராசிரியரை சட்டவிரோதமாக கைது செய்வதா..?அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக பேராசிரியரை சட்டவிரோதமாக கைது செய்வதா என்று அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கனிமொழி எம்பி (திமுக துணைப்பொதுச்செயலாளர்): பேராசிரியரும் பொருளாதார அறிஞருமான கலையரசனை அதிகாலையில் பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி அராஜகமான முறையில் கைது செய்து, அலைக்கழித்து, மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ள தவெக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்குப் பிரச்னை என இந்த அரசின் நிர்வாகச் சீர்கேடுகளை விமர்சிக்கும் எவர் ஒருவரும் காவல்துறையின் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற மிரட்டலாகத்தான் இந்த கைது சம்பவம் இருக்கிறது. அறிவுடைமையின் அருமை புரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில் கலைஞர்களும் கல்வியாளர்களும் வஞ்சிக்கப்படுவார்கள். தவெகவின் ஆட்சி அப்படியானதே.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் ): கருத்துச் சுதந்திரம் என்பது ஆட்சியாளர்களைப் பாராட்டுவதற்கான உரிமை மட்டுமல்ல; அவர்களை விமர்சிக்கவும் கேள்வி கேட்கவும் உள்ள அடிப்படை ஜனநாயக உரிமையாகும். ஆட்சியாளர்களை விமர்சிப்பவர்கள் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கைகளுக்கு உள்ளாகிறார்கள் என்ற தோற்றம், ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும். எனவே, பேராசிரியர் கலையரசன் மீதான காவல்துறை நடவடிக்கையின் சட்டபூர்வ அடிப்படை, புகார் மற்றும் விசாரணை விவரங்கள் குறித்து தமிழக அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும்.

சீமான் (நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்): சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியரும், பொருளாதார ஆய்வாளருமான கலையரசனை, ஓர் போலி இன்ஸ்டாகிராம் பதிவை காரணமாகக் கூறி அதிகாலையில் வீட்டிலிருந்து காவல்துறையினர் அழைத்துச் சென்றதாக அளித்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. எல்லா நிலையிலும் இந்திய ஒன்றிய பாஜக அரசை கனகச்சிதமாகப் பின்பற்றும் தவெக அரசின் ஆணவப்போக்கை கண்டிக்கிறேன்.

இதுபோல, எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக தலைவர்), ச.உமர் பாரூக் (எஸ்டிபிஐ மாநில பொறுப்பு தலைவர்) ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.