ரிப்பன் மாளிகையை மக்கள் சுற்றிப் பார்க்க அனுமதி: சென்னை மாநகராட்சியின் திட்டத்திற்கு மக்களிடம் வரவேற்பு
சென்னை: சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை வரலாற்றை விளக்குவதற்காக மரபு நடைபயணம் தொடங்கி உள்ளது. சென்னையில் சுற்றிப்பார்க்க பல்வேறு இடங்கள் உள்ளன. அதில் ஒன்று சேனை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பாரம்பரிய கட்டடமான ரிப்பன் மாளிகை. பிரமாண்டமாக காட்சி அளிக்கும் ரிப்பன் மாளிகையில் அமைந்திருக்கும் சிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாற்றை புதைத்து வைத்திருக்கின்றன. சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 9ஆம் தேதி ரிப்பன் மாளிகையை பார்வையிட்டு மரபு நடைபயணத்தை மேற்கொள்ளலாம் என்று அறிவித்திருந்த நிலையில், அதற்காக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொலைபேசி மூலம் ஆர்வம் தெரிவித்தனர். முதற்கட்டமாக 50 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து ரிப்பன் மாளிகையை பார்வையிட்டனர்.
இந்த பயணத்தின் போது பங்கேற்பாளர்களுக்கு ரிப்பன் கட்டடத்தின் வரலாறு, கட்டிடக்கலையின் சிறப்புக்கள் மற்றும் நகர நிர்வாகத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன. வாரத்தின் 4 நாட்கள் ரிப்பன் மாளிகையை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எப்போதும் ரிப்பன் மாளிகையை வெளியே இருந்து தான் பார்த்து சென்றிருக்கிறோம். ஆனால் தற்போது உள்ளே உள்ளே உள்ள கட்டிடக்கலைகளை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். இந்த மரபு நடைப்பயணத்தின் முடிவில் சென்னை மேயரால் கையெழுத்திடப்பட்ட ரிப்பன் கட்டட ரப்பர் ஸ்டாம்புடன் கூடிய அஞ்சல் அட்டை அனைவர்க்கும் வழங்கப்பட்டது. இத்தகைய பயணங்கள் நகரின் பழமையான அடையாளங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு வரலாற்று பாரம்பரியத்தின் மீது மக்களின் ஆர்வத்தை வளர்க்க உதவும்.


