Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மரக்காணம் இசிஆர் சாலையில் அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அதிரடியாக அகற்றிய வருவாய்த்துறை அதிகாரிகள்

மரக்காணம் : மரக்காணம் இசிஆர் சாலையில் இருந்த பல்வேறு அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை வருவாய்த்துறையினர் அகற்றினர்.தமிழக பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, ஊராட்சி சாலைகள் மற்றும் பல்வேறு அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் பல்வேறு அரசியல் கட்சியினர், சாதி சங்கத்தினர் தங்களது கட்சியின் கொடிக்கம்பங்கள், டிஜிட்டல் பேனர்களை அமைத்துள்ளனர்.

இதுபோல் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் மற்றும் டிஜிட்டல் பேனர்களை தன்னிச்சையாக காற்று கனமழை போன்ற இயற்கை சீற்றங்களின் காரணமாக கிழிந்துவிட்டாலோ அல்லது வேண்டுமென ஒரு சில சமூக விரோதிகள் கிழித்து சேதப்படுத்தி விட்டாலோ பேனர்களை வைத்த அரசியல் கட்சியினர் மற்றும் சாதி சங்கங்களை சேர்ந்தவர்கள் சாலை மறியல், அரசைக் கண்டித்து உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

இதுபோன்ற காரணங்களால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சட்டம் ஒழுங்கு பாதித்தல், கடை அடைப்புகளால் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் அவதிப்படும் நிலை வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன் உயர் நீதிமன்றம் சார்பில் மத்திய மாநில அரசுகளுக்கு சொந்தமான சாலைகள் மற்றும் பொது இடங்களில் எந்த அரசியல் கட்சியினரோ அல்லது சாதி சங்கங்களோ அவர்களது கொடிக்கம்பங்களை அமைக்க கூடாது. இதற்கு முன் அவர்கள் அமைத்திருக்கும் கொடிக்கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும்.

அப்படி சம்பந்தப்பட்ட நபர்கள் அகற்றவில்லை என்றால் அதிகாரிகள் அவற்றை அதிரடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இந்த உத்தரவு முடிந்த பிறகும் பலர் மரக்காணம் இசிஆர் சாலையில் வைத்திருந்த தங்களது கொடிக்கம்பங்கள் மற்றும் கொடிக்கம்பம் அமைப்பதற்கான பீடங்களையும் அகற்றவில்லை.

இதனால் நேற்று மதியம் மரக்காணம் வருவாய்த்துறை அதிகாரிகள் இசிஆர் சாலையில் இருந்த அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் சாதி சங்கங்களின் கொடிக்கம்பங்களை அதிரடியாக அகற்றினர்.