திருவனந்தபுரம்: கேரளத்தில் கடந்த 10 வருடங்கள் பினராயி விஜயன் முதல்வராக இருந்த போது பத்திரிகையாளர்களால் கூட தலைமைச் செயலகத்திற்குள் எளிதில் நுழைய முடியாத நிலை இருந்தது. இந்த நிலை வி.டி. சதீசன் முதல்வரான பின்னர் மாறியது. முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்திப்பதற்காக தலைமைச் செயலகத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். குறிப்பாக முதல்வர் அலுவலகத்தில் ஏராளமானோர் திரண்டதால் அதிகாரிகள் உள்பட அனைவருக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டது. பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உருவானது.
இதைத் தொடர்ந்து தற்போது தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்திக்க பொதுமக்களுக்கு கட்டுப்பாடு ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 3 முதல் 5.30 மணி வரை மட்டுமே முதல்வரை பொதுமக்கள் சந்திக்க முடியும். இந்த நாட்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல் நலக்குறைவு இருப்பவர்களை முதலமைச்சரின் குறைதீர் மையத்திற்கு முதல்வர் நேரில் சென்று அவர்களை சந்திப்பார்.



