டெல்லி: ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏ-க்கள் கட்சி தாவியதாகத் தொடரப்பட்ட வழக்கில் மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா, ஜெயக்குமாருக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), ஜெயக்குமார் (பெருந்துறை), தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இதையடுத்து கட்சி மாறிய இவர்கள் நால்வரும் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் செல்வகுமார் என்பவர் கடந்த ஜூன் மாதத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்திருப்பதாகக் கூறி, நீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார். மேலும், கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் நால்வர் மீது நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவை தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கின் மூல மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டதன் காரணமாக இந்த மனுவை விசாரணைக்கு எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


