Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

7.5% இடஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விடுதிகளில் பாகுபாடு: முதல்வரிடம் ஆசிரியர் அமைப்புகள் கோரிக்கை

சென்னை: உயர்கல்வித் தொழிற்படிப்புகளில் 7.5% முன்னுரிமை இடஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கல்லூரி விடுதிகளில் நிகழும் பாகுபாடுகளைத் தடுத்து நிறுத்தி அவசர நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பேரவை ஆகிய அமைப்புகள் தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் 7.5% முன்னுரிமை இடஒதுக்கீட்டுத் திட்டம் தமிழக உயர்கல்வி வரலாற்றிலும் சமூக நீதியிலும் ஒரு மைல்கல்லாகத் திகழ்கிறது. இருப்பினும், பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட உயர்கல்வித் தொழிற்கல்விக் கல்லூரிகளின் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி விடுதிகளில் இம்மாணவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாகுபாடுகளுக்கு உள்ளாக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

கட்டணம் செலுத்திப் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு அறையில் 2 முதல் 4 நபர்கள் மட்டுமே தங்க வைக்கப்படும் நிலையில், 7.5% ஒதுக்கீட்டு மாணவர்களைத் தனியாகப் பிரித்து ஒரே அறையில் 10க்கும் மேற்பட்டோரை நெருக்கடியாகத் தங்க வைக்கும் அவலநிலை நிலவுகிறது. விடுதி உணவு வழங்குவதிலும், இதர விடுதிச் சலுகைகளைப் பயன்படுத்துவதிலும் இம்மாணவர்கள் வேறுபடுத்தப்பட்டுத் தாழ்வாக நடத்தப்படுகின்றனர். அரசுப் பள்ளிகளில் படித்துச் சாதனை படைத்து உயர்கல்விக்கு வந்த இம்மாணவர்களிடையே இப்பாகுபாடுகள் கடுமையான தாழ்வு மனப்பான்மையையும் உளவியல் சிக்கல்களையும் ஏற்படுத்துகின்றன. நடப்புக் கல்வியாண்டிலேயே (2026-27) விடுதிகளில் மாணவர்கள் சேர்ந்து வரும் சூழலைக் கருத்தில் கொண்டு, பாகுபாடற்ற சூழலை உறுதி செய்யத் துறை சார்ந்த அறிவுறுத்தல்களையும் வழிகாட்டுதல்களையும் உடனடியாக வழங்க வேண்டும். ஒரு விடுதி அறையில் அதிகபட்சமாக 4 மாணவர்கள் மட்டுமே தங்குவதையும், கூடுதல் அறைகள் இல்லாத பட்சத்தில் ஏனைய மாணவர்களுடன் கலந்தே தங்குவதையும் உறுதிசெய்ய தெளிவான சுற்றறிக்கை மற்றும் நிலையான இயக்க முறைமை (SOP) வெளியிடப்பட வேண்டும். மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், மாநில அளவில் உயர்கல்வித் துறைச் செயலாளர் தலைமையிலும் கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து விடுதிகளில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் வகையில் பிரத்யேக ‘கட்டணமில்லா தொலைபேசி எண்’ மற்றும் இணையப் புகார் போர்ட்டலை அரசு உருவாக்க வேண்டும். விடுதி ஒதுக்கீட்டிலோ, செயல்பாடுகளிலோ பாகுபாடு காட்டும் கல்லூரி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வகை செய்யும் அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும். சமூக நீதியைக் காக்கும் முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு உரிய அவசர ஆணைகளைப் பிறப்பிக்க வேண்டும்’ என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் மணிகண்டன் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பேரவையின் மாநிலத் தலைவர் ரங்க. ஜெயவேல் ஆகியோர் தங்கள் மனுக்களில் வலியுறுத்தியுள்ளனர்.