மைக்கா மவுண்ட், சிவசண்முக நகரில் சாலை வசதி ஏற்படுத்த கோரிக்கை
கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்டது 2வது வார்டு மைக்கா மவுண்ட், மற்றும் 8வது வார்டு சிவசண்முக நகர்.இங்கு 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தேவர் சோலை செல்லும் சாலையோர பள்ளத்தாக்கில் இந்த பகுதி அமைந்துள்ளது.
பிரதான சாலையில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லும் நடைபாதைகள் சுமார் 150 மீட்டருக்கும் அதிகமான தூரம் வரை செங்குத்தான நிலையில் அமைக்கப்பட்டுள்ளன. பாரம் கொண்டு செல்பவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், வயதானோர் இதனை சிரமப்பட்டு பயன்படுத்தி வருகிறார்கள். இதனால், இணைப்பு சாலை அமைத்து தரக்கோரி பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, நகராட்சி சார்பில் கடந்த சில வருடங்களுக்கு முன் கூடலூர் சுங்கம் ரவுண்டனா பகுதி வழியாக தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில் இருந்து பிரிந்து சிவ சண்முக நகர் செல்லும் வகையில் சாலை அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்பின், அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை உரிய முறையில் ஆய்வு செய்து இப்பகுதிக்கு சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், மைக்கா மவுண்ட் பகுதியில் தாழ்வான பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் பயன் பெறும் வகையில் தேவர் சோலை சாலையில் இருந்து மைக்கா மவுன்ட் தாழ்வான பகுதிகளுக்கு சாலை அமைக்க இங்குள்ள நடைபாதையை அகலப்படுத்தி சாலையை விரிவுபடுத்த முடியும்.
இதன்மூலம், இப்பகுதிகளில் உள்ளவர்கள் ஆட்டோ மற்றும் சிறிய ரக வாகனங்களை தங்களது பகுதிகளுக்கு இயக்கி பயன்பெற முடியும். எனவே, கடந்த பல வருட காலமாக தங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கையை நிறைவேற்றித் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.