Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பிரதிநிதிகள் சபை, செனட்டுக்கு இடைக்கால தேர்தல் அமெரிக்காவில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: இன்று முடிவுகள் வெளியாகிறது: கட்சியை கரை சேர்ப்பாரா அதிபர் டிரம்ப்?

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்திற்கான இடைக்கால தேர்தல் வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடந்தது. இதன் முடிவுகள் இந்திய நேரடிப்படி இன்று அதிகாலையில் இருந்து வெளியாகத் தொடங்குகின்றன. அதிபர் டிரம்புக்கு அக்னிப்பரீட்சையான இத்தேர்தலில் அவர் தனது கட்சியை கரை சேர்ப்பாரா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளான பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் அவைக்கான தேர்தல் நடத்தப்படும்.

இதனை இடைக்கால தேர்தல் என்றழைப்பதுண்டு. பிரதிநிதிகள் சபையின் அனைத்து 435 இடங்களுக்கும், செனட் சபையின் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும். செனட் அவையில் 100 உறுப்பினர்கள் உள்ள நிலையில் அவர்கள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு தேர்தல்கள் நடத்தப்படும் வகையில் அவர்களின் பதவிக்காலங்கள் சுழற்சி முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய அதிபர் டிரம்ப் கடந்த 2024ல் பதவியேற்ற பிறகு, ஆளும் குடியரசுக் கட்சியும், ஜனநாயக கட்சியும் மோதும் இந்த இடைக்கால தேர்தல் நேற்று நடந்தது. இந்திய நேரப்படி நேற்று மாலை 3.30 மணியிலிருந்து வாக்குப்பதிவுகள் தொடங்கின. மொத்தம் 21 கோடி அமெரிக்கர்கள் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். இதில், 50 மாகாணங்களில் 5.7 கோடி பேர் ஏற்கனவே தபால் ஓட்டு மூலம் தங்கள் வாக்குகளை செலுத்தி விட்டனர்.

இன்று அதிகாலை வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து முடிந்ததைத் தொடர்ந்து உடனடியாக வாக்குகள் எண்ணும்பணி தொடங்கிவிடும். இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணியிலிருந்து முன்னணி நிலவரங்கள் தெரியவரும். தற்போது இரு அவைகளிலும் பெரும்பான்மையை கொண்டுள்ள அதிபர் டிரம்பின் குடியரசு கட்சிக்கு இந்தத் தேர்தல் ஒரு அக்னிப் பரீட்சையாகும். மேலும், இடைக்கால தேர்தல், பதவியில் இருக்கும் அதிபரின் செயல்பாடுகளுக்கான மக்கள் தீர்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

பொதுவாக, வெள்ளை மாளிகையை தன் வசம் வைத்துள்ள ஆளுங்கட்சி இடைக்கால தேர்தல்களில் நாடாளுமன்ற இடங்களை இழப்பது வழக்கமான நிகழ்வாக உள்ளது. கடந்த 20 இடைக்கால தேர்தல்களில் வெறும் 2 முறை மட்டுமே ஆளுங்கட்சி தனது பலத்தை அதிகரித்துள்ளது. பல்வேறு முன்னணி செய்தி நிறுவனங்கள் மற்றும் ஆய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்புகள் டிரம்ப் மற்றும் அவரது கட்சிக்குச் சாதகமாக இல்லை. இதை மாற்றிக் காட்ட அதிபர் டிரம்ப் கடந்த ஒரு மாதமாக சூறாவளி பிரசாரம் செய்துள்ளார்.

இடைக்கால தேர்தலில் குடியரசு கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் தக்கவைத்துக் கொண்டால், ஒவ்வொருவருக்கும் தலா 5,000 டாலர் மதிப்பிலான ஊக்கத்தொகை காசோலை வழங்கப்படும் என அதிரடி இலவச வாக்குறுதியை அள்ளி வீசியுள்ளார். மேலும், தேர்தல் நெருங்குவதற்கு முன்பு டீசல் மற்றும் எரிபொருள் விலையை கட்டுக்குள் கொண்டு வர, ரஷ்ய டீசல் மீதான தடைகளை டிரம்ப் நிர்வாகம் தற்காலிகமாக நீக்கியது. துணை அதிபர் ஜே.டி.வான்சும் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.

டிரம்பின் இந்த முயற்சிகள் எந்தளவுக்கு கைகொடுத்து அவரது கட்சியை கரை சேர்க்கப் போகிறது என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். கருத்துக்கணிப்புகள் கூறுவது போல இரு அவைகளையும் ஜனநாயக கட்சி கைப்பற்றி விட்டால், அது டிரம்பின் நடவடிக்கைகள் மீது நாடாளுமன்றத்தின் ஆழமான ஆய்விற்கும் கட்டுப்பாடுகளுக்கும் வழிவகுக்கும். இது அவரது செயல்திட்டங்களை முன்னெடுத்து செல்லும் திறனை கடுமையாக கட்டுப்படுத்தும்.

இந்த இடைக்கால தேர்தல் முடிவுகள் அமெரிக்காவின் உள்நாட்டுக் கொள்கைகளை மட்டுமல்லாது, சர்வதேச உறவுகளையும், குறிப்பாக இந்தியாவுடனான உறவையும் தீர்மானிக்கும் காரணியாக அமையும். நாடாளுமன்றத்தின் கட்டுப்பாடு ஜனநாயகக் கட்சியின் கைக்கு மாறினால், டிரம்பின் அதிகார வரம்பு கட்டுப்படுத்தப்படும். இதனால் இத்தேர்தலை உலக நாடுகள் உற்றுநோக்குகின்றன. அமெரிக்க மக்கள் அளிக்கும் வாக்குகள் அமெரிக்காவின் அடுத்த 2 ஆண்டுகால அரசியல் பாதையை தீர்மானிக்க உள்ளது.

* கடைசி வாய்ப்பு

ஜனநாயக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ‘‘ஒஹியோ, மிச்சிகன் மற்றும் ஜார்ஜியாவில் பேரணிகள் நடத்தி வாக்கு சேகரித்துள்ளார். இது டிரம்பை வெளிப்படையாகவே கலக்கமடைய செய்துள்ளது. ஒபாமா தனது பிரசாரத்தில், ‘‘குறைந்தபட்சம் டிரம்பை கட்டுப்படுத்தவும், இந்த நிர்வாகத்தின் சில முட்டாள்தனங்களை கட்டுப்படுத்தவும் இந்த தேர்தல்தான் நமது கடைசி, சிறந்த வாய்ப்பு,” என்று கூறி உள்ளார்.

* தேர்தல் களத்தில் இந்திய வம்சாவளிகள்

நாடாளுமன்றத்திற்கு மட்டுமின்றி ஒஹியோ உள்ளிட்ட 36 மாகாணங்களில் ஆளுநர் பதவிகளுக்கான தேர்தல்களும் நடந்து வருகிறது. ஒஹியோவில், இந்திய வம்சாவளி அமெரிக்கரான விவேக் ராமசாமி, தனது போட்டியாளரும் ஜனநாயக கட்சி வேட்பாளருமான ஏமி ஆக்டனை எதிர்த்து நிற்கிறார். ஆளுநர் பதவி முதல் நகரமன்ற உறுப்பினர் பதவி வரை பல்வேறு பொறுப்புகளுக்கு பல இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் போட்டியிடுகின்றனர்.

கேரளாவில் பிறந்த ஜனநாயக கட்சியை சேர்ந்த நித்யா ராமன், லாஸ் ஏஞ்சல்ஸின் மேயர் பதவிக்காக, தனது முன்னாள் மேலதிகாரியான கரேன் பாஸை எதிர்த்து போட்டியிடுகிறார். இதுதவிர, இந்திய வம்சாவளி அமெரிக்கச் எம்பிக்களான ரோ கண்ணா, அமி பேரா, பிரமிளா ஜெயபால் மற்றும் சுஹாஸ் சுப்பிரமணியம் ஆகியோர் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட போட்டியிடுகின்றனர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பியா தண்டியா மற்றும் அமிஷ் ஷா ஆகியோர், முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகும் முயற்சியில் உள்ளனர்.

* கொந்தளிக்கும் அமெரிக்கர்கள்

தற்போது பிரதிநிதிகள் சபையில் 218-214 என்ற மிக சிறிய பெரும்பான்மையையும், செனட்டில் 53-47 என்ற பலத்தையும் ஆளும் குடியரசு கட்சி கொண்டுள்ளது. ஜனநாயகக் கட்சியினர் இரு அவைகளையும் கைப்பற்ற முறையே பிரதிநிதிகள் சபையில் 4 இடங்களையும், செனட்டில் 4 இடங்களையும் கூடுதலாக வெல்ல வேண்டியுள்ளது.

ஆனால், டிரம்ப் நிர்வாகத்தின் மீதான மக்களின் தற்போதைய அதிருப்தி அவரது குடியரசு கட்சிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, ஈரானுடனான போர் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட கடுமையான விலைவாசி உயர்வு, டீசல் மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஆகியவை நடுத்தர வர்க்க அமெரிக்கர்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளை மாளிகை அறிக்கையின்படி, டிரம்ப் கடந்த 32 நாட்களில், குடியரசு கட்சியின் கோட்டைகளாக உள்ள 20 மாநிலங்களுக்கு சூறாவளிப் பயணம் மேற்கொண்டு, 30 பேரணிகளில் உரையாற்றினார். ஆனால் அவரது பிரசாரம் தான் குடியரசு கட்சி வேட்பாளர்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.