எந்த நேரத்திலும் என் மனம் தளர நான் அனுமதிப்பதில்லை,எச்செயலைச் சாதிப்பதற்கும் குன்றா உழைப்பு, குறையாத முயற்சி, கூர்மையான புத்தி ஆகிய மூன்றும் மிகவும் இன்றியமையாதவை என்கின்றார் தாமஸ் ஆல்வா எடிசன்.
மனம் என்பது ஒரு கண்ணாடி போன்றது,அது உடைந்துவிடாமல் பாதுகாப்பது நம்பிக்கையில் தான் இருக்கிறது.வெற்றி அடைந்தே தீருவேன் என்று மனதில் றுதி கொண்டுவிட்டால் நம் வெற்றியை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.
நம்மிடம் உள்ள திறமை என்ன என்று கண்டுபிடிப்பதே முதல் வெற்றி. அதை சரியான இலக்கில் செலுத்தி பயனை அடைவதில் தான் நம் திறமைக்கான சவால்கள் நிறைந்திருக்கிறது.ஓநாமி என்ற மல்யுத்த வீரன் மிகவும் புகழ்பெற்ற
வனாகத் திகழ்ந்தவன். குருவை மிஞ்சிய சீடன். ஆனால் தன் சொந்த மாணவர்களிடமே தோற்றுவிடும் நிலை அவனுக்கு ஏற்பட்டது.
பகிரங்கப் போட்டியில் தோற்று விடுவோமோ என்ற பயத்தில் ஓநாமி மிகவும் கவலை கொண்டான். அதனால் அருகில் இருந்த புத்தர் கோயிலுக்கு சென்றான்.அது கடற்கரை ஓரத்தில் இருந்தது.மன அமைதியை நாடி அங்கே அமர்ந்திருந்தார். அப்போது அங்கே வந்தார் ஒரு ஜென் குரு,அவரிடம் தன் நிலையைச் சொல்லி முறையிட்டான் மல்யுத்த வீரன். குருவுக்கு அவன் மேல் கருணை பிறந்தது.
உன் பெயரின் பொருள் தெரியுமா, உனக்கு ஓநாமி என்ற பெயருக்கு பேரலை என்று பொருள்.இன்று இரவு இந்த கோவிலில் தங்கி இருந்து இந்த அலைகளை கவனி, நீயே அந்த அலைகள் என்று உணர்.நீ ஒரு மல்யுத்த வீரன் என்பதை மறந்துவிடு,நீ அலையாகி விடு,பாறைகள் மேல் மோதும்போது அலையாகிவிடு என்றார் குரு.
ஓநாமி அன்று இரவு அங்கிருந்தான். அவன் அலைகளையே கவனித்தான், நேரம் ஆகஆக அவன் ஆழ்ந்து போய் அலையாகவே மாறிவிட்டான். அதை உயர எழுவது போலவும், அலையாகிய தான் கோயிலுக்குள் புகுந்து எல்லாவற்றையும் உருட்டித் தள்ளுவது போலவும் உணர்ந்தான்.
காலையில் பார்த்தபோது, அவன் அங்கே கோயிலுக்குள் இருக்கவில்லை. வெளியே கடற்கரையில்தான் இருந்தான்.அவன் முகத்தில் ஒரு புன்முறுவல் தோன்றியது. எழுந்து கம்பீரமாக நடந்தான்.போட்டியில் கலந்துகொண்டான். எல்லோரையும் வென்று ஈடு இணையற்ற ஜப்பானிய மல்யுத்த வீரராக நெடுங்காலம் வாழ்ந்தான்.
உண்மைக்குரு எதையும் நமக்கு உபதேசிப்பதில்லை.நம்மை நமக்கு அடையாளம் காட்டுகிறார். அவ்வளவுதான், தன்னைத் தானுணர்தல் ஞானம்.இதைத் தான் சாக்ரடீஸ் உன்னையே நீ அறிவாய் என்கின்றார்.
எப்போதும் விழுந்துவிடாமல்.விழும் ஒவ்வொரு தடவையும் எழுந்து நிற்பதில் தான் அது குடிகொண்டு உள்ளது என்று கன்பூஸியஸ் சொல்வதுபோல் வெற்றியைக் கொண்டாடும் மனதுக்கு தோல்வியைக் கண்டு துவண்டுவிடாத பக்குவமும் வர வேண்டும்.துவண்டு விடாதீர்கள் சொர்க்கத்திற்கான தூரம் மிகக் குறைவாகத்தான் உள்ளது என்கிறார் ரூதர்போர்ட்.
ஒரு போரின்போது அகப்பட்ட கைதிகள் கடினமான ஒரு தரைப்பகுதி வழியே தப்பித்துச் செல்லத் திட்டமிட்டார்கள். திட்டமிட்டப்படியே தப்பித்துச் செல்ல முயன்றார்கள்.அந்தக் கூட்டத்தில் கைக்குழந்தையோடு ஒரு தாயும் இருந்தாள்.கூட்டத்தில் இருந்தவர்களில் ஆண்கள் ஒருவர் மாற்றி ஒருவராக அந்த குழந்தையை தூக்கிக் கொண்டே நடந்து வந்தார்கள்.பல மைல் தூரம் அவர்கள் பசியோடு நடந்து வந்த போது ஒரு முதியவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்துவிட்டார். கண்விழித்து அவர் சொன்னார்.
நீங்கள் எல்லோரும் தப்பித்துச் செல்லுங்கள் எனக்கு வயதாகிவிட்டது.நான் இப்படியே கிடந்து இறந்துபோகிறேன் என்றார்.ஆனால் அங்கிருந்தவர்களுக்கு அவரை விட்டுச் செல்ல மனமில்லை.ஆனால் அங்கிருந்தவர்களுக்கு அவரை தூக்கிச் செல்லவும் தெம்பில்லை. குழந்தையின் தாய் வேகமாக தன் குழந்தையை அந்த முதியோரிடம் கொடுத்தார்.இந்த குழந்தையை நீர் தான் சுமக்க வேண்டும் என்றாள்.அந்த ஒரு கணப்பொழுதில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அந்த முதியோர் எழுந்து குழந்தையோடு நடக்க ஆரம்பித்தார். அவர் மனதில் இருந்த அவநம்பிக்கையும், சக்தியில்லா நிலையும் காணாமல் போனது.
இந்த முதியவரைப் போலத்தான் இங்கே நிறைய பேர் வீழ்ந்து கிடக்கிறார்கள்.எழுந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் வரும்போது தங்களையும் அறியாமல் எழுந்து விடுகிறார்கள். ஆக வீழ்ச்சி என்பது மனதில் தான் உடலில் அல்ல. அப்படி எழுந்தவர்தான் இந்த சாதனைப் பெண்மணி.
நேபாளத்தில் பேரிடர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள 40 வயதுடைய ஹெலிகாப்டர் கேப்டன் பிரியா அதிகாரி என்பவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கடந்த 6 நாட்களில் இவர் மட்டும் 100 பேரை தனது ஹெலிகாப்டர் மூலம் மீட்டுள்ளார்.
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் ஏற்பட்டிருக்கும் பேரிழப்புகளும் உலகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். 4 ஆயிரம் பேர் வரை காணாமல் போயுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், திபெத்- நேபாள எல்லைப் பகுதியிலுள்ள ரசுவா மாவட்டத்தின் பல பகுதிகள் உருக்குலைந்து போயுள்ளன.
திபெத்தில் உள்ள லெண்டே ஆற்றைப் பனிப்பாறை மறித்ததால் கோஷி ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
இந்தக் கோஷி ஆறு நமது பீகார் மாநிலத்திலும் ஒவ்வொரு ஆண்டும் பெரும் திடீர் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்துவது உண்டு. இந்த நதியை ‘பீகாரின் துயரம்’ என்றும் குறிப்பிடுவார்கள்.
நேபாளத்தில் ஏராளமான பனி ஆறுகள் இருப்பதால், அந்த நாடும் அவ்வப்போது வெள்ளப்பெருக்கை எதிர்கொள்கிறது. எனினும், ஆகஸ்ட் 26ம் தேதி கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் முன்பு எப்போதும் பார்த்திராதது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள 40 வயதுடைய ஹெலிகாப்டர் கேப்டன் பிரியா அதிகாரி என்பவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கடந்த 6 நாட்களில் இவர் மட்டும் 100 பேரைத் தனது ஹெலிகாப்டர் மூலம் மீட்டுள்ளார். மோசமான வானிலையைத் தாண்டி, மீட்க முடியாத இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் இவர் தன்னை அர்ப்பணித்துள்ளார்.
இந்த பிரியா அதிகாரி எடுத்தவுடனே ஹெலிகாப்டர் கேப்டன் ஆகிவிடவில்லை. சுற்றுச்சூழல் அறிவியல் படித்துவிட்டு, ஹெலிகாப்டர் ஒன்றில் பணிப்பெண்ணாக பணியாற்றிக்கொண்டிருந்தார். ஹெலிகாப்டரில் பணியாற்றியதால், பைலட்டாக வேண்டுமென்ற ஆசை அவருக்குள் ஏற்பட்டது. தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் நாட்டுக்குச் சென்று ஹெலிகாப்டர் ஓட்டப் பயிற்சி பெற்றார். 2017ம் ஆண்டு பைலட் லைசென்ஸ் பெற்றார். பிரியா அதிகாரிதான் நேபாளத்தின் முதல் பெண் ஹெலிகாப்டர் பைலட் என்பதும் கூடுதல் தகவல்.
நேபாளத்தில் அடிக்கடி இயற்கைப் பேரிடர் ஏற்படுவதால், பிரியா அதிகாரி ஏற்கனவே பல முறை மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவருக்கு மீட்புப்பணியில் மிகுந்த அனுபவம் உண்டு. எவரெஸ்ட் சிகரத்தில் 6,200
மீட்டர் உயரத்தில் சிக்கியவர்களைக் கூட தனது ஹெலிகாப்டரில் சென்று மீட்டு வந்துள்ளார்.
நேபாள வெள்ளம் குறித்து பிரியா அதிகாரி கூறுகையில்,’’ ரசுவா மாவட்டத்தில் டைமுர் என்ற கிராமமே முற்றிலும் அழிந்து போனது. ஆங்காங்கே சடலங்கள் மண்ணில் புதைந்து கிடந்தன. இந்த கிராமத்தில் மட்டும் 200 பேரை நாங்கள் மீட்டோம். சுமார் 20 ஹெலிகாப்டர்கள் ஒரே பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால், பைலட்டுகளுக்கிடையே ஒருங்கிணைப்பும் தொடர்ச்சியான ரேடியோ வழியான தொலைத் தொடர்பும் மிக முக்கியம். கொஞ்சம் கவனம் தப்பினாலும் விபத்து ஏற்பட்டு விட வாய்ப்புள்ளது.
இந்தப் பகுதியில் மட்டும் ஐந்து நீர் மின் திட்டங்கள் இருந்தன. அத்தனையும் அழிந்துபோய்விட்டன. அங்கு பணியாற்றிய அனைவரும் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு முறையும் நான் வானத்தில் பறக்கும்போதும், கீழே இருந்து யாராவது துணியைக் காட்டி அசைத்து எனது கவனத்தை ஈர்க்கின்றனர். நானும் , எப்படியாவது அவர்களை மீட்டு விடுவேன் என்கிறார் பிரியா.
பொதுவாக, ஹெலிகாப்டர் கேப்டனாக ஆண்கள்தான் அதிகம் பணியாற்றுவார்கள். பல தடைகளைத் தாண்டி பிரியா அதிகாரி ஹெலிகாப்டர் கேப்டனாகியுள்ளார். பெண்கள் எத்தகைய கடினமான சூழலிலும் பணியாற்ற முடியுமென்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் பிரியா. மேலும் இக்கட்டான சூழல்களில் பெண்கள் துணிச்சலுடன் செயல்பட வேண்டும் என்பது இவருடைய வாழ்க்கை நமக்கு நமக்கு உணர்த்தக்கூடிய உன்னதப் பாடமாகும்.
எண்ணற்ற உயிர்களை காப்பாற்றிய பிரியாவின் பணி மகத்தான போற்றுதலுக்கு உரிய பணியாகும். இன்றைய இளைஞர்கள் இவரைப் போல சமூக சிந்தனையுடன் புதிய சமுதாயத்தை உருவாக்க,புதிய மனிதராக புத்தாக்கம் செய்துகொள்ள வேண்டும்.அதற்கு உங்களை நீங்களே கொஞ்சம் கொஞ்சமாகச் செதுக்கி தயார்படுத்திக் கொள்ளுங்கள். வெற்றி வெகு தூரத்தில் இல்லை, மிக மிக அருகில் தான் இருக்கிறது.


