Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இரு நாடுகளின் உறவை வலுப்படுத்த இந்தியாவில் சீன முதலீடுகள் அவசியமாகும்: தூதர் விக்ரம் துரைசாமி பேச்சு

பெய்ஜிங்: சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகத்தில் நடந்த பாதுகாப்புவாத கொள்கை மற்றும் உலகளாவிய பொருளாதார நிர்வாகம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சீனாவுக்கான இந்தியாவின் தூதர் விக்ரம் துரைசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘‘இயல்பாகவே நாங்கள் சீனாவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்ய விரும்புகிறோம். குறிப்பாக மருந்துத் துறை போன்ற எங்களுக்கு போட்டித்தன்மை வாய்ந்த துறைகளில் இத்தகைய கோரிக்கையை முன்வைப்பதில் எந்த தவறும் இல்லை.

இந்திய தயாரிப்புகளுக்கு குறிப்பாக மருந்துப் பொருட்களுக்கு சீன சந்தையை திறந்து விடுவதும், அத்துடன் இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்வதும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒட்டுமொத்த உறவை மேம்படுத்துவதற்கு உதவும். வர்த்தகம் மற்றும் வணிகம் ஆகியவை இந்தியா- சீனா உறவுகளின் முக்கிய அங்கங்களாக உள்ளன. இந்தியச் சந்தையில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்களை மீண்டும் உருவாக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. உண்மையில் அதிக அளவிலான சீன முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் கடந்த சில மாதங்களில் கொள்கை சூழல் மாற்றப்பட்டுள்ளது’’ என்றார்.

பாக். உடன் ஒப்பிடுவது நியாயமற்றது

சீனாவிற்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, ‘‘மேற்கு ஆசிய மோதலில் மத்தியஸ்தம் செய்வது தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே செய்யப்படும் ஒப்பீட்டை நிராகரிக்கிறோம். பாகிஸ்தானுடன் ஒப்பிடுவது சற்று வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் நியாயமற்றது என்று நான் கருதுகிறேன். இரு நாடுகளின் பொருளாதார நிலைகளே இதற்கான உண்மைகளை உணர்த்தும். நாடுகளை அவை என்னவாக இருக்கின்றன என்பதன் அடிப்படையிலும், பரந்த உலகளாவிய அமைப்பில் உண்மையில் அவை என்ன செய்கின்றன என்பதன் அடிப்படையிலும் நாம் பார்க்க வேண்டும். பெரும்பாலான நாடுகள் எட்டாத அளவிற்கு இந்தியா உலகத்துடன் ஒன்றிணைந்துள்ளது” என்றார்.