Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பதிவுத்துறையில் ஊழல் வழக்கில் சிக்கியவர்களுக்கு விதிகளை மீறி பணி வழங்கியதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘இலைக்கட்சியில் இருந்து தாவிய தந்தைக்கும், மகனுக்கும் அரசு வழக்கறிஞர் பதவி கொடுத்திருக்காமே தூய அரசு...’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொட்டவரையும் விட மாட்டோம் என்ற சினிமா டயலாக் எல்லாம் வெறும் வெற்று பேச்சு என்று நிரூபித்துள்ளது தூய அரசு. தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களை நியமிச்சிருக்காங்க. எப்படியும் அரசு வழக்கறிஞர் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கையில் விசில் கட்சியின் வக்கீல்கள் இருந்தாங்கலாம்..

ஆனால், அரசு வழக்கறிஞர் நியமனத்தில செல்வாக்கு படைத்தவர்கள் அரசியல் கேம் ஆடி ஆளும்கட்சியின் 2வது பவர் சென்டர் அமைச்சரை ஆனந்தப்படுத்தி அரசு வழக்கறிஞர் பதவியை வாங்கிட்டாங்கலாம்.. இதனால் ஆரம்பத்தில் இருந்து விசுவாசியாக இருந்த விசில் கட்சிக்காரங்க கடும் அப்செட் ஆயிருக்காங்கலாம்.. இதில் ஏரிகள் மாவட்டத்தில் ஐந்தாம் படை ஊர்ல இருக்கிற கோர்ட்டுக்கும், வடகோடி எல்லையில் இருக்கிற மற்றொரு கோர்ட்டுக்கும் தந்தை, மகனை அரசு வக்கீல்களாக நியமிச்சிருக்காங்கலாம்..

இவர்கள் இலைக்கட்சியில் இருந்து சமீபத்தில் தான் விசில் கட்சியில சேர்ந்தாங்களாம்.. இவர்கள் மீது மோசடி வழக்கு இருந்தும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஒரே குடும்பத்தில் 2 பேருக்கு அரசு வக்கீல் பதவி கொடுத்திருக்காங்க.. இதனால் ஐந்தாம் படை ஊருல இருக்குற விசில் கட்சி வழக்கறிஞர்கள் கடுப்புல இருக்காங்கலாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாங்கனி ஊருல குற்ற வழக்கில் சிக்கியவர்களும் அரசு வக்கீலாக நியமிக்கப்பட போறாங்களாமே...’’ என கேட்டார் பீட்டர் மாமா.

‘‘விசில் கட்சி ஆட்சி பொறுப்பேற்றதால், கடந்த 30ம் தேதி, முந்தைய அரசு வக்கீல்கள், நீதிபதியை சந்தித்து பிரியாவிடை வாங்கிட்டாங்களாம்.. ஆனால், புதிய வக்கீல்கள் நியமிக்கும் வரை இவர்கள் பணியை தொடரலாம் என்ற உத்தரவை போடலாம் என, விசில் கட்சி தலைவரின் காதுக்கு தகவல் சென்றதாம்.. ஆனால் ஒரு நிமிடம் கூட பழைய வக்கீல்கள் இருக்க கூடாது என உத்தரவு வந்திச்சாம்.. அரசு வக்கீல் நியமனம் காரணமாக, நீதிமன்றங்களில் பத்து நாளா ஆஜராக அரசு வக்கீல்கள் இல்லாததால் வழக்குகள் முடங்கி கிடக்குதாம்..

ஜாமீன், முன்ஜாமீன், சாட்சி விசாரணை என அப்படியே கிடக்குதாம்.. அரசு வக்கீல்கள் நியமனத்திற்கான அறிவிப்பை அந்தந்த கலெக்டர்கள் தான் வெளியிடுவாங்களாம்.. இதில், சட்டம் படித்த யார் வேண்டுமானாலும் விண்ணப்பம் செய்யலாமாம்.. ஆனால் விசில் கட்சியை சேர்ந்த வக்கீல்கள் பட்டியலைத்தான் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் கொடுத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கு.. விண்ணப்பம் செய்தவர்கள் மீது குற்ற வழக்கு இருக்குதா என போலீசார் விசாரித்து ரிப்போர்ட் கொடுப்பாங்களாம்..

ஆனா விசில் ஆட்சியில ஆடு திருட்டு வழக்கில் இருக்கும் வக்கீலை அரசு வக்கீலாக்கிட்டாங்களாம்.. இதையெல்லாம் பார்க்கும்போது ஊரே சிரிப்பா சிரிக்குதாம்.. மாங்கனி மாநகரிலும் இவ்வாறான புகார்கள் ஆங்காங்கே கசிஞ்சிக்கிட்டிருக்குதாம்.. விசில் தலைவர் மாங்கனி ஊருக்கு வந்தபோது, விசில் தொண்டர்கள் தாக்குதலை நடத்தினாங்களாம்.. பாதிக்கப்பட்டவங்க கொடுத்த புகார் மீது வழக்கு போட்டுள்ளார்களாம்... அதில் இருக்கும் சிலருக்கும் அரசு வக்கீலாக ஆகும் லக்கு இருப்பதாக கோர்ட் முழுவதும் ஒரே பேச்சா இருக்குதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அமைச்சரின் செல்வாக்கை பயன்படுத்தி காக்கி அதிகாரி தனது இடமாற்றத்தை தடுத்து விட்டாராமே...’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ரீல்ஸ் கட்சி ஆட்சியில் மாநிலம் முழுவதும் நிர்வாக ரீதியாக கலெக்டர்கள், எஸ்பிக்கள் உள்ளிட்டோர் மாற்றப்படுகிறார்கள். ஆனால், புரம் என முடியும் கடலோர மாவட்டத்தின் உயர் காக்கி அதிகாரி மட்டும் இன்னும் மாற்றப்படவில்லையாம்.. கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக இவர் இங்கு நீடித்து வருகிறாராம்.. இதுகுறித்து விசாரித்தபோது, இந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சரான, மாஜி பிரதமரின் பெயரை கொண்டவருக்கும், இவருக்கும் ரொம்பவே நெருக்கமாம்..

கடந்த சில நாட்களுக்கு முன், காக்கி அதிகாரியின் குடும்ப பிறந்த நாள் விழா, அவரது பங்களாவில் நடந்ததாம்.. இந்த விழாவில் அமைச்சர் யாருக்கும் தெரியாத வகையில் ரகசியமாக வந்து கலந்துகொண்டு, விழாவை சிறப்பித்தாராம்.. அமைச்சரின் உறவினர்கள் பலரும் அரசு ஒப்பந்த பணிகளில் பிசியாக இருக்கும் நேரத்தில், காக்கிகளின் உதவி தேவைப்படும் என்பதால் இருதரப்பும் ரொம்பவே இணக்கமாக உள்ளதாம்.. இதனால்தான் இந்த காக்கி அதிகாரி மட்டும் இன்னும் மாற்றப்படவில்லை, என ரீல்ஸ் கட்சி தரப்பினரே பேச ெதாடங்கி இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பத்திரப்பதிவு துறையில் விதிமீறல் நடந்திருக்காமே...’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழக அரசின் பதிவுத் துறையை பொறுத்தவரை, ஒரு சார்பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துவிட்டால், அவர் மீண்டும் அதே பணியில் தொடர முடியாது. மாறாக, நிர்வாக பணிக்கு இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். தற்போது, இந்த பட்டியலில், தமிழகம் முழுவதும் 40 சார்பதிவாளர்கள் உள்ளனர். இவர்களில், மான்செஸ்டர் மாவட்டத்தில் மட்டும் 8 பேர் இருக்கிறார்களாம்..

இவர்கள் அனைரும் அரசின் விதிமுறையை மீறி, சார்பதிவாளர் பணியிடத்திலேயே தொடர்கிறார்களாம். அதோடு அருகில் உள்ள நல்ல வருமானம் வரக்கூடிய பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு அதே லெவல் அதிகாரிகளாக பணிபுரிந்து வருகின்றனராம்.. இவர்களுக்கு பாதுகாவலராக ஐந்து எழுத்து பெயர் கொண்ட பெண் அதிகாரி ஒருவர் இருக்கிறாராம்.. அரசு உத்தரவை மீறி இப்படி பணி வழங்க பல லகரங்கள் கைமாறியுள்ளதுதான் காரணம் என இத்துறை அலுவலர்கள் பேசிக்குறாங்கலாம்...’’ என்றார் விக்கியானந்தா.