அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு; 700 சதவீத கட்டண உயர்வு என்றால் விமானத்தில் பயணம் செய்யாதீங்க: உச்சநீதிமன்றம் கருத்து
புதுடெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான வழக்கறிஞர் இதனை அவசர விசாரணையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். விமானக் கட்டணங்கள் 700 சதவீதம் உயர்ந்துள்ளன என்று வழக்கறிஞர் கூறிய நிலையில் அதற்கு விமானத்தில் பயணம் செய்யாதீர்கள் என்று நீதிபதிகள் அமர்வு பதிலளித்தனர்.
மேலும் இதனை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உச்சநீதிமன்ற அமர்வு மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனிடையே சிவில் விமானப் போக்குவரத்து துறையில் வெளிப்படைத்தன்மையையும், பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய ஒரு வலுவான மற்றும் சுதந்திரமான ஒழுங்குமுறை ஆணையம் தேவை என்று கோரி சமூக ஆர்வலர் லட்சுமி நாராயணன் தாக்கல் செய்த மற்றொரு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்கனவே விசாரித்து வருகின்றது.
இந்த வழக்கில், விமானப் போக்குவரத்த துறையை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாக கொண்ட பாரதிய வாயுயான் அதினியான் 2024ன் கீழ் ஒன்றிய அரசு வெளியிடப்படவுள்ள விதிகளை வருகிற 16ம் தேதி உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


