முதல்ல அரை கிலோ சிவப்பு மக்காச்சோளத்தை 2 பாத்தி அளவுக்குத்தான் போட்டேன். அதே விதையை எடுத்து விதைச்சி கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சி இப்போ 5 ஏக்கர்ல பயிரிட்டிருக்கேன்” என பேசத் தொடங்கினார் ராஜா. பெரம்பலூர் மாவட்டம் எலம்பலூரில் சிவப்பு மக்காச்சோளத்தை இயற்கை முறையில் விளைவிக்கும் இவர் மாடு வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். அவரை சந்தித்தபோது தமது சாகுபடி அனுபவம் குறித்து விரிவாக பேசினார். “பெரம்பலூர் இயற்கை விவசாயக்குழுவைச் சேர்ந்த பழ.ஆறுமுகம் மகன் கார்த்தி மூலமா அரை கிலோ சிவப்புச்சோளம் விதை குடுத்தாங்க. அதை ரெண்டு பாத்தி அளவுக்குப் போட்டேன். நல்லா விளைஞ்சது. கார்த்தியை கூப்பிட்டு விளைச்சலைக் காட்டினப்ப, இதே மக்காச்சோளத்திலிருந்து விதை எடுத்து மறுபடி விதைங்க. அதுக்கப்புறம் விதைக்காக செலவு பண்ண வேண்டியதில்லன்னு சொன்னார். அத வச்சி ஒரு அரை ஏக்கர் போட்டேன். அந்த விதையை எடுத்து 2 ஏக்கர் போட்டேன். இப்போ 5 ஏக்கர் சிவப்பு சோளம் போட்டிருக்கேன்.
தைப்பட்டத்துல இந்த சோளத்தை விதைப்பாங்க. மஞ்சள் மக்காச்சோளம் போலவேதான் விதைக்கணும். விதைக்கும்போது சாலுக்கு சால் ஒன்னேகால் அடியும், விதைக்கு விதை ஒன்னேகால் அடியும் வச்சி போட்டா காற்றோட்டம் நல்லா கிடைக்கும். ஒவ்வொரு சாலைக்கும் தட்டைக்கும் இடையில நீளம் நல்லா இருக்கும். நல்ல விளைச்சல் கிடைக்கும். குறைந்த அளவு போடும்போது முத்துச்சோளம், கடலைல்லாம் போடுற கைமிஷின்ல போட்டு உருட்டினேன். இப்போ சின்ன ட்ராக்டர் வச்சி விதைச்சிருக்கேன். விதைச்சதுலர்ந்து 7 நாள்ல முளைச்சி வந்துடும்.ரெண்டாவது வாரத்துல புல் சின்னதா இருக்கும்போதே ஒரு களை எடுத்துடணும். இது நல்லா வறட்சியைத் தாங்கி வருது. புழு தாக்குதல் குறைவு. பொதுவா மாசத்துக்கு ஒரு தடவ தண்ணி கட்டினா போதும். மழை இல்லாதப்ப மட்டும் தண்ணி கட்டினா போதும். விதைச்சதுலர்ந்து 20 நாள்ல நல்லா வளந்துடும். ஒரு மாசத்துக்கப்புறம் பஞ்சகவ்யம், மீன் அமிலம், அமிர்தக்கரைசல் நீர்வழிப் பாய்ச்சல்ல விடலாம். 20 நாளுக்கு மேல பூச்சித்தாக்குதல் வர்ற மாதிரி தெரிஞ்சா சாதாரண இயற்கை பூச்சி விரட்டி அடிக்கணும். 45 நாள்ல தாண்டிடுச்சின்னா நல்லா வளந்துடும். தட்டை 7 அடி வரைக்கும் வரும். அதுலர்ந்து 25 நாளுக்கப்புறம் மணி புடிக்கிற குலை தள்ளும். அதுக்கப்புறம்தான் மகரந்தச் சேர்க்கை நடக்கும். அப்புறந்தான் விளைச்சல் பால் பிடிக்கிற சமயத்துல 10லர்ந்து 15 நாள்ல சிகப்பா மாறும். விளைச்சல் முத்த முத்த சோளம் சிவப்பா மாறும். சோளத்தோட முனையில சிவப்பு தட்டும். பால் முழுசா ஏறிட்டா சோளம் முழுக்க சிவப்பாயிடும். 120 நாள்ல அறுவடை வந்துடும். சித்திரை வைகாசி பட்டம்னா வெயில் அதிகமா இருக்கும். 10 நாள் முன்னாடியே அறுவடைக்கு வரும்.
அறுவடைக்கு அப்புறம் 2 மாசம் வயல்ல மாட்டைக் கட்டிடுவோம். அப்புறம் மடக்கி உழுதுடுவோம். அதனால அடுத்த பட்டம் போடும்போது விளைச்சல் நல்லா இருக்கு. வயலை ஆடுமாடு மேய வச்சி மடக்கி உழுறதுக்கு 80 நாள் ஆயிடும். 10 ஏக்கர்ல 4 ஏக்கர் சிவப்பு சோளம் போட்டிருக்கோம். மத்த எடத்துல ஆடுமாடு மேயும். அடுத்த தடவை அந்த வயல்ல சோளம் போட்டுட்டு, இந்த இடத்துல ஆடு, மாடை கட்டிடுவோம். இப்படி மாத்தி மாத்தி பயிரிடறதால மண்வளம் குறையாம இருக்கு. அறுவடை மற்றும் விற்பனையைப் பற்றி சொன்ன ராஜா ``எங்க வயல்ல விளையுற சோளத்தை முக்கால்வாசி விதைக்கும், கால்வாசி உணவுக்கும் குடுக்கறோம். விதைக்கு குடுக்கும்போது சோளத்தை இயந்திரம் மூலம் அறுவடை பண்ணா, அந்த மிஷின்ல ஏற்கனவே அறுவடை பண்ண நிலத்துல இருக்குற மஞ்சள் சோளத்தோட கலப்பு வந்துடும். அதனால, நாங்க விதைக்கு குடுக்கறதை கையாலயே உடைச்சி குடுக்குறோம். அதனால விதைல மஞ்சள் சோளம் கலக்காம சிவப்பு சோளம் மட்டும் குடுக்க முடியுது. 4 ஏக்கர்லயும் ஒரே நாள்ல விதைக்க மாட்டோம். ஒரு ஏக்கருக்கும் இன்னொரு ஏக்கருக்கும் விதைக்கறதுல 10 நாள் இடைவெளி இருக்கும். அதே மாதிரி அறுவடை பண்ணும்போதும் 10 நாள் இடைவெளி வரும். அப்போ விதைக்கு தேவை இருக்குறதுக்கு ஏற்ப, ஆர்டர் வந்தப்புறந்தான் அறுவடை பண்ணுவோம்.
மாடு வச்சிருக்குறதால பால் கறந்து விற்க போவேன். அப்படி போகும்போது அந்த வாடிக்கையாளர்களே சோளம் வேணும்னு கேப்பாங்க. அவங்களுக்கு தீவனத்துக்காக விற்கறோம். விதைக்கு குடுக்கும்போது கிலோ 250 ரூபாய்க்கு குடுக்கறோம். தீவனத்துக்கு அதைவிட 10 ரூபாய் 20 ரூபாய் குறைவான விலைக்கு குடுக்கறோம். சோளக்கதிர் மணிகளை விதைக்கும் தீவனத்துக்கும் குடுக்கறோம். சோளத்தை நெல், கோதுமையோட சேத்து அரைச்சி மாட்டுக்கும் தீவனமா மாத்தி குடுக்கறோம். பசுந்தீவனமா சோளத்தட்டையை பயன்படுத்திக்கறேன். இதனால மாட்டுத்தீவனம் வெளியில வாங்கமாட்டோம். மாட்டுத்தீவன செலவு குறையுது. அடியில இருக்குற வேர்ப்பகுதியும் மண்ணுக்குள்ள போறதால உரமா மாறிடுது’’ எனும் ராஜா தனது மாடு வளர்ப்பு பற்றியும் கூறினார்.
“7 மாடு வச்சிருக்கோம். ஜெர்ஸி க்ராஸ் ரகம். இதோட கோமியமும், சாணமும் வயலுக்கு உரமூட்ட பயன்படுது. மாடு வளக்கறதுக்கு கன்னுக்குட்டி வாங்கியாந்து, அதுக்கு முறையான தீவனமும், மருந்தும் குடுத்து ஆரோக்கியமா வளக்கறேன். மாடு ஈனும் பருவம் வந்ததும் சினை ஊசி போடுறோம். மாடு வளக்குறதுல முக்கியமான விஷயம் வருஷா வருஷம் தவறாம ஒரு மாடுக்கு ஒரு கன்னுக்குட்டி எடுத்து நாம மிச்சம் பண்ணாத்தான் நமக்கு ஆதாயம். சிலர் சரியான பருவத்துல சினை ஊசி போடாம பருவத்தை தவற விட்டுடுவாங்க. அந்த மாதிரி விட்டுட்டா சினை பிடிக்கிற தன்மை குறையும். சினை பிடிக்காமலே கூட போயிடும். நாம பருவம் தவறாம சரியா சினை ஊசி போட்டுடறதால வருஷத்துக்கு ஒரு கன்னுக்குட்டி எடுத்துடறோம்.
நாம வரப்புக்கு கலைக்கொல்லி மருத்து அடிக்கிறதில்ல. இதால ரெண்டு பயன் இருக்கு. ஒன்னு வரப்புல வளர்ற புல், மாட்டுக்கு உணவாகுது. வெயில் காலத்துல நிலம் சூடாகும்போது நன்மை செய்யும் பாக்டீரியா எல்லாம் வரப்புல போய் சேந்துக்கும். வெயில் குறைந்ததும் அந்த பாக்டீரியால்லாம் நிலத்துக்கு திரும்ப வந்து நிலத்தை வளமாக்கும். ஒரு தடவ அறுவடை பண்ணதும் உடனே அடுத்த பயிர் போடக்கூடாது. அந்த நிலத்துல மாட்டை கட்டிவச்சி, அதுல கோமியம் சாணிலாம் விழறதால நிலம் வளமாகுது. இலை தழை மக்குகளையும் மடக்கி உழவு ஓட்டிடறோம். இதனால நிலம் வளமா இருக்கு’’ என்றவர், விற்பனை மற்றும் வருவாயைப் பற்றியும் பேசினார்.
“பயிர், மாடு வளர்ப்பு, பால் நேரடி விற்பனை, மாடுகளுக்கு சினை ஊசி போடுறதுன்னு நாலஞ்சு வேலைகளை செய்றதால வருமானம் நிலையா இருக்கு. நம்ம வயல்ல உழவு ஓட்டுறதுக்கு செகண்ட் ஹேண்ட்ல ஒரு வண்டி வாங்கிட்டோம். சோளம் விதைச்சதுக்கான நடவு, அறுவடை செலவு மட்டும்தான். போன வருஷம் ஏக்கருக்கு மூட்டை 100 கிலோன்னு 10 மூட்டை சிவப்பு சோளம் விளஞ்சது. தரமான விதையா பொறுக்கி அதை மட்டும் விதையா கொடுக்கும்போது கிலோ 250 ரூபாய்க்கு கொடுத்தோம். விதைக்கு பொறுக்கி எடுத்தப்புறம் மிச்சம் இருக்குற மக்காச்சோளத்தை தீவனத்துக்கு விக்கறோம். அதிலும் கொஞ்சம் தரம் குறைஞ்சதையும், சோளத்தட்டைகளையும் மாட்டுக்கு தீவனமாவும் பயன்படுத்திக்கறோம். இப்படி மூனு விதமா சோளத்தை பயன்படுத்திக்கறோம். செலவெல்லாம் போக, சிவப்பு மக்காச்சோளத்துல ஒரு ஏக்கர்ல பட்டத்துக்கு 1 லட்சம் ரூபாய் லாபமா கிடைக்கும். பால் விற்பனையில கிடைக்குறது கூடுதல் வருவாய்” என நிறைவாக கூறினார்.
தொடர்புக்கு:
ராஜா: 80124 23005.



