மார்க்கெட்டில் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கண்ணில் பட்டுக் கொண்டிருந்த செவ்வாழை, தற்போது எல்லா இடங்களிலும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. பொட்டாசியம், மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் சி, தையமில், ஃபோரிக் ஆசிட், பீட்டா கரோட்டின் என மனித உடலுக்கு தினசரி தேவைப்படும் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்த பழம் இது. வாழைப்பழங்களில் அதிகளவு சத்துள்ளது செவ்வாழைதான்.
உடம்பை வலுவாக்கும் காயகல்பம்
மூளையின் செயல்பாடு, இதயத்தின் செயல்பாடு, ரத்த ஓட்டம், ரத்த உற்பத்தி, சிறுநீரகத்தின் இயக்கம், கல்லீரலின் இயக்கம், குடலின் இயக்கம் ஆகியவற்றுக்குத் தேவையான சத்துகள் நிறைந்தது செவ்வாழை. தவிர, ஒவ்வொரு தாவரத்துக்கும் தனித்துவமான தாவர வேதிப்பொருள்கள் இருக்கும். அந்த அடிப்படையில் உடம்பை வலுவாக்கும் காயகல்பமாக மருத்துவத்தில் செவ்வாழைப் பழமும் பயன்படுத்தப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் மருத்துவரின் ஆலோசனையின்படி செவ்வாழையை அளவாகச் சாப்பிடலாம். ஏனென்றால் இதிலிருக்கிற ஊட்டச்சத்துகள் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கிற தன்மையைக் கொண்டுள்ளன. இது ஆய்வு மூலமாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி. இந்த நேரத்தில் முடியவில்லை என்றால் பகல் 11 மணி பிரேக் நேரத்திலோ, மாலை 4 மணி பிரேக் நேரத்திலோ சாப்பிடலாம். உணவு எடுத்தவுடன் செவ்வாழையைச் சாப்பிட்டால் மந்தமாக உணர்வதுடன், இதனுடைய முழு சத்துகளும் நமக்குக் கிடைக்காது. இது எல்லா பழங்களுக்கும் பொருந்தும்.
செவ்வாழையில் இருக்கிற பொட்டாஷியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும்.
கண் பிரச்னைகளை தடுக்கும்
செவ்வாழையில் நியூட்டின், ஸியான்தினின், பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ ஆகிய சத்துக்கள் அதிகம். இவை கண்களின் செல்களில் ஏற்படக் கூடிய பிரச்னைகளை சரி செய்யக்கூடியவை. வேலை, படிப்பு எனப் பெரியவர்களில் ஆரம்பித்து குழந்தைகள் வரை இன்றைக்கு கம்ப்யூட்டரையும் செல்போனையும் சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது. தொடர்ந்து கம்ப்யூட்டர் பார்ப்பதால் உடனடியாக வருகிற பிரச்னைகளான கண்கள் சிவந்துபோதல், கண்களில் எரிச்சல், நீர் வடிதல் போன்றவை தடுக்கப்படவும், வயதின் காரணமாகக் கண்களின் உள் அடுக்குகளில் இருக்கிற தசைகளில் ஏற்படக் கூடிய பாதிப்புகள் தடுக்கப்படவும் காலை ஒன்று, மாலை ஒன்று என நாளொன்றுக்கு இரண்டு செவ்வாழைப் பழங்கள் சாப்பிட வேண்டும். உடல் சூட்டினால் கண்களில் எரிச்சல் ஏற்பட்டால் செவ்வாழைப்பழத்தை மெல்லிய துண்டுகளாக நறுக்கி கண்களின் மேலே வைத்தால் அரை மணி நேரத்தில் சரியாகிவிடும்.
ஒரு நாளின் முதல் உணவு.
காலையில் முதல் உணவாக ஒரு செவ்வாழைப்பழத்தை உமிழ்நீருடன் கூழாக மென்று சாப்பிட்டால் நாள் ஒன்றுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகளில் 60 சதவிகிதம் கிடைத்துவிடும். அதன்பிறகு நாம் சாப்பிடுகிற உணவு, சத்தில் குறை இருந்தாலும் உடல் சமாளித்துவிடும். காலையில், முதல் உணவாக செவ்வாழையைச் சாப்பிட்டால் அதிலிருக்கிற மொத்த சத்தையும் உடல் கிரகித்துக் கொள்ளும். சூரியன் உதித்த நேரத்தில் இருந்து 7 மணி நேரம் வரை முழு செரிமானம் நடக்கும். அதன் பிறகு செரிமானம் நடைபெறுவது குறைந்து விடும். அதனால்தான் காலையில் முதல் உணவாக செவ்வாழைப்பழத்தை சாப்பிடச் சொல்கிறேன்.
எலும்பு மஜ்ஜையை பலப்படுத்தும்
30 வயதைக் கடந்தாலே பெண்களுக்கு எலும்புத் தேய்மானம், தசை தொய்வு உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும். முந்தைய தினம் சாப்பிட்ட சில உணவு களால் மறுநாள் காலையில் மலம் வெளியேற முடியாமல் இருக்கும். காலையில் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட அது குடலைத் தூண்டி கழிவை வெளியேற்ற வைக்கும். இதனால் ஊட்டச்சத்து ஓரிடத்தில் தேங்காமல் உடல் முழுமைக்கும் கொடுக்கப்படும்.
செவ்வாழைப்பழத்தில் இருக்கும் சத்துகள் எலும்பு மஜ்ஜையை பலப்படுத்தி, புதிய ரத்த அணுக்களை உருவாக்கும் தன்மை வாய்ந்தவை என்பதால், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும். எந்தவொரு புதிய கிருமி மனித உடலுக்குள் வந்தாலும் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இருந்தால் தப்பித்து விடலாமே. பொதுவாக நல்ல செரிமானமும், ஊட்டச்சத்துகள் உடல் முழுக்க சீரான பகிர்வும் தான் எலும்பு, பற்களின் பலத்தை உறுதி செய்யும்.
நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
நரம்புமண்டலம் பலவீனமாக இருப்பவர்கள் தினமும் காலை 6 மணிக்கு ஒரு செவ்வாழைப்பழம் என 48 நாட்கள் சாப்பிட வேண்டும். இப்படிச் சாப்பிட கைகால் நடுக்கம், கைகால் மரத்துப் போதல் போன்ற நரம்பு சம்பந்தப்பட்ட பலவீனங்கள் சரியாகும். நரம்பினுடைய கடைசிப்பகுதியில் ஏற்படக்கூடிய பாதிப்பினால் கைகளில் அனல்படுவதுபோல ஓர் உணர்வு ஏற்படும். இந்தப் பிரச்னையை சரிசெய்யக்கூடிய சத்துகளும் செவ்வாழைப்பழத்தில் இருக்கின்றன. மாதவிடாய் காலத்தில் மெக்னீஷியம் மிக அவசியம், இதற்கு செவ்வாழை நல்ல மருந்து. மாதவிடாய் கால தலைவலி, இடுப்பு, முதுகு வலிகள், சிலருக்கு கணுக்கால் வலிகள் கூட இருக்கும். அதற்கெல்லாம் செவ்வாழை அருமையான மருந்து.
கறுப்பான தலைமுடி, சுருக்கமில்லாத சருமம், தெளிவான கண்பார்வை என செவ்வாழைப்பழம் சாப்பிடுபவர்களை இளமையாக வைக்கும்.
- கவிதா சரவணன்


