Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கியிருக்கும் செங்கிஸ்கானை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மஞ்சள் மாவட்ட மாநாடு முடிந்த கையோடு ஆள் பிடிக்கும் வேலையில் செங்கிஸ்கான் தீவிரமாக இறங்கிட்டாராமே..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சியில் இருந்த செங்கிஸ்கான் சமீபத்துல நடிகர் கட்சிக்கு தாவினார். ஆனா அவரோடு மாஜி எம்பியை தவிர குறிப்பிடும்படி முக்கிய ஆட்கள் யாரும் போகலை.. ஆனாலும் இலைக்கட்சியை சேர்ந்தவங்களை கொஞ்சம் கொஞ்சமாக குறிப்பாக மாஜி எம்எல்ஏக்கள், அமைச்சர்களை கட்சிக்கு கொண்டு வருகிறேன்னு நடிகர்கிட்ட செங்கிஸ்கான் உறுதி கொடுத்தாராம்.. இத்தனை நாள் மாநாடு நடத்துற வேலையில பிஸியாக இருந்ததால இலைக்கட்சி ஆட்களை பிடிக்கும் வேலையில் கவனம் செலுத்த முடியலையாம்.. இப்ப அதற்கான வேலையை தொடங்கி இருக்கிறாராம்.. குறிப்பாக சொந்த மாவட்டமான மஞ்சள் மாவட்டத்துல ஒரு சிட்டிங் எம்எல்ஏவிடம் பேச்சு ஓடிட்டு இருக்கிறதா சொல்றாங்க.. ஜெயமான அந்த சிட்டிங் எம்எல்ஏ, நடிகர் கட்சிக்கு ஜம்பிங் செய்யலாம்னு யோசனையில் இருக்கிறதா சொல்றாங்க.. செங்கிஸ்கான் இணைப்பு தொடர்பா போர்க்கொடி தூக்கிய போது, அவரோடு மா.செ. பதவி பறிக்கப்பட்டது.. அந்த பதவி தனக்கு தான் கிடைக்கும்னு ஜெயமான எம்எல்ஏ எதிர்பார்த்து இருந்தாராம்.. ஆனா சோப்புநுரை புகழ் மாஜி மந்திரி அதை தடுத்து லாவகமாக திசைமாற்றி விட்டாராம்.. இதனால் கடும் அப்செட்டில் இருந்து வந்த ஜெயமானவரை செங்கிஸ்கான் ஆறுதல் படுத்தி என்னுடன் வந்துவிடு கேட்கின்ற பதவியும், எம்எல்ஏ சீட்டும் உறுதி தருகிறேன்னு பேரம் பேசிட்டு இருக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பொக்லைனில் ஆபத்தான நிலையில் தொழிலாளர்களை அழைத்துச் சென்றது சமூக அமைப்புகளை ெகாந்தளிக்க வைச்சிருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தமிழகத்தில் விக்கிரவாண்டி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலைப்பணி 5 வருடங்களாகியும் இதுவரை முடிந்தபாடில்லையாம்.. விழுப்புரம்- கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய 65 கிமீ சாலைப்பணி பல காரணங்களால் ஜவ்வாக இழுத்ததாம்.. இதனால் பழைய டெண்டரை கழற்றிவிட்டு புதிய ஒப்பந்தம் போடப்பட்டதாம்.. பணிகள் மீண்டும் சூடுபிடிக்க பொக்லைன் இயந்திரத்தில், சாலை பணியாளர்களை ஏற்றி ஆபத்தான நிலையில் பணிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்களாம்.. சாலை பணிகள் வேகமாக நடப்பது வரவேற்கப்பட வேண்டியதுதான்.. அதற்காக இப்படியா தொழிலாளர்களை பொக்லைன் பெட்டியில் ஆபத்தான முறையில் நிற்க வைத்து அழைத்துச் செல்வது என்ற கேள்வியை பொதுநல அமைப்புகள் எழுப்பி வருகிறதாம்.. தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டியவர்களே இதை செய்யலாமா என கொந்தளித்த சிலர், திட்ட இயக்குநரிடம் முறையிட தயாராகி வருகிறார்களாம்.. இதனால் விரைவில் உயர் அதிகாரிகளின் நேரடி விசிட் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு சாலை பணியாளர்களிடம் எழுந்துள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மருந்தில் கோடிக்கணக்கில் பணம் புரண்டிருக்க அதிகார புள்ளிகள் நடுக்கத்தில் இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘குட்டி பிரான்ஸ் எனப்படும் யூனியனில் போலி மருந்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறதாம்.. ஏற்கனவே தொழிலதிபர், அரசியல் பிரமுகர் என 20 பேர் வரை சிக்கியிருக்க சிறப்பு புலனாய்வு குழு தோண்ட தோண்ட பூதாகரமாக பகீர் தகவல்கள் அம்பலமாகிறதாம்..

இதன் எதிரொலியாக தற்போது ஐஎஸ்எப் அதிகாரி ஒருவர் சிக்கியிருக்க, மேலும் சில அதிகாரிகளிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடக்கிறதாம்.. விரைவில் சிபிஐ, என்ஐஏ முகாமிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாக அரசியல் புள்ளிகளோ கதிகலக்கத்தில் உள்ளார்களாம்.. பவுர்புல் நிர்வாகியுடன் நெருக்கமாக இருந்தவருக்கே இந்த கதி என்றால் நம்ம நிலை என்னவாகுமோ என்ற அச்சம் வளமான துறைகளை கவனித்த அதிகார புள்ளிகளிடம் பரவலாக உள்ளதாம்.. மருந்தில் மட்டுமல்ல, வரி ஏய்ப்பிலும் கோடிக்கணக்கில் பணம் புரண்டிருக்க அடுத்தடுத்த விசாரணை நகர்வுகளால் சபை நடுநிலை நாயகரும், சில பிரதிநிதிகளும் இவ்விவகாரத்தில் சற்றே நடுக்கத்தில் உள்ளாராம்.. இதுபற்றிதான் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேச்சு..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நடிகரின் கட்சியை கைப்பற்றுவது தான் மாஜிக்களுக்கு போடப்பட்ட அஜெண்டாவாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சியில் சேருவது என்பது கானல் நீராகி போன நிலையில், தேனிக்காரர் புதிய முடிவு ஒன்றை எடுத்திருக்காராம்.. மா.செ.க்களின் கூட்டத்தை கூட்டி, எல்லோரும் கருத்துகளை சொல்லுங்கள் என கேட்டிருக்காரு.. இனிமேல் இலைக்கட்சியில் சேருவது என்பது முடியாத காரியம் என்பதால், தனிக்கட்சியை அறிவிக்கப்போறாராம்.. ஏற்கனவே, இவரது மூத்த மகன், நடிகரின் கட்சி நிகழ்ச்சிகளுக்கு துட்டு உதவி செய்வது எல்லாம் பழங்கதை தான்.. அவரோடு தற்போது தந்தையும் சேரப்போறாராம்.. இலைக்கட்சியில் இருந்து துரத்தப்படும் மாஜிக்கள் எல்லோரும், ஒரு திட்டத்தோடு நடிகர் கட்சியில் இணைவதாக கிசுகிசு ஒன்று பரவியிருக்கு.. கோபி கோட்டையனை தொடர்ந்து, தேனிக்காரரும் போகப்போறாராம்.. இவங்க எல்லோரும் சேர்ந்த பிறகு, ஒவ்வொரு மண்டல தளபதிகளாக மாறுவாங்களாம்.. அவர்களுக்கென ஒரு இடத்தை பிடித்த பிறகு, ‘ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது’ என்பதை போல, தங்களோட ஆட்டத்தை தொடங்குவாங்களாம்.. ஏற்கனவே ஒரு கட்சியில் இருந்து பழம் தின்னு கொட்டை போட்டது போல, நடிகரிடம் இருந்தும் பழம் தின்னுவாங்களாம்.. இப்படியே போய்க்கிட்டிருக்கும் நேரத்தில், தேர்தலில் ஜெயிக்கும் மாஜிக்கள், நடிகரின் கட்சி தங்களோடதுன்னு சொல்லி கைப்பற்றவும் திட்டம் ஒன்றை வச்சிருப்பதாக ரகசிய தகவல் கசிஞ்சிருக்காம்.. இதற்கான முக்கிய காரணமும் இருக்குன்னு அடிச்சி சொல்றாங்க... மலராத கட்சியோட நெருக்கமாக இருந்தவர் தான் கோபி கோட்டையன்.. ஒன்றிய நிதி மந்திரி உள்ளிட்டோருடன் நெருக்கமாக இருக்காராம்.. அவரோடு தேனிக்காரரும் இன்னும் ரொம்ப நெருங்கியவர் தான்.. மலராத கட்சியோட ஒன்றிய தலைமை குடுத்த திட்டத்தோடு தான், கோட்டையன் நடிகர் கட்சிக்குள்ள அதிரடியா புகுந்துட்டார்.. தற்போது தேனிக்காரரும் உள்ளே செல்ல நேரம் குறித்துக்கொண்டிருக்கிறார்.. இவர்கள் உள்ளே சென்று, கரூரில் 41 பேர் பலியான விவகாரத்தை, கிரைம் சினிமா பட இயக்குனர் போல கண்ணு, காது வைத்து நடிகரின் காதில் ஊதுவாங்களாம்.. மகுடிக்கு மயங்கி பதுங்கும் பாம்பு போல, அவர் மலராத கட்சியின் கூட்டணிக்கு போகணும்.. இல்லை என்றால் அவரது கட்சியை கைப்பற்றுவது தான் இவர்களின் அஜெண்டாவாம்... இதை நோக்கி தான், மாஜிக்களின் பயணம் இருக்கிறது என்பது அரசியல் நிபுணர்களின் தெளிவுரையா இருக்குதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.