Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சமையல் பொருட்களும்... சில மாற்றங்களும்!

நாட்டுப்புற மக்கள் உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்காகவும், உணவு வகைகளைச் சமைப்பதற்காகவும், உண்பதற்குப் பயன்படுத்துவதற்காகவும் பல்வேறு விதமான பொருட்களைப் பயன்படுத்திவருகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும் பொருட்களில் காலம் காலமாக பல்ேவறு மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. அத்தகைய மாற்றங்கள் இயற்கையோடு இயைந்ததாகவும், சூழலுக்கு ஏற்றதாகவும் அமைந்திருக்கும். ஆனால் அண்மைக் காலமாக, நிகழ்ந்து வரும் மாற்றங்கள் இயற்கைக்கு மாறாக, சூழலுக்கு ஒவ்வாத தன்மையுடையனவாக உள்ளன. உணவு சமைப்பதற்குத் தேவைப்படும் அடுப்பு முதல் துடுப்பு வரை அனைத்திலும் இத்தகைய மாற்றம் நிகழ்ந்து வருகிறது.

இயற்கை வளங்களைத் தங்களின் தேவைக்கேற்பப் பயன்படுத்தி வந்த நாட்டுப்புற மக்கள், இன்று தங்களின் தேவைகளுக்காக சில வணிக நிறுவனங்களை எதிர்பார்த்துக் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. இது மக்களின் வாழ்க்கை முறையை மட்டுமல்ல, அவர்களின் போக்கையும் கூட மாற்றி இருக்கிறது. அதன் விளைவு தமிழ்ப் பண்பாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குடிப் பதற்கும் சமைப்பதற்கும் இலவசமாகக் கிடைத்துவந்த குடிநீரைக்கூட இன்றுகாசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்குக் தள்ளப்பட்டு இருக்கிறோம். கிணறுகளிலும், கைப்பம்புகளிலும் தங்களுக்கு தேவைப்படும்போது, தங்களால் இயன்றபோது, ஓய்வு கிடைக்கும்போது தண்ணீர் பிடித்து வருவதுதான் மக்களின் வழக்கமாக இருந்தது.

ஆனால் இப்போது அதுபோல் முடியாது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து எப்போது தண்ணீர் திறந்துவிடப்படுகிறதோ, அப்போதுதான் தண்ணீர் பிடிக்க முடியும். இது மக்கள் மனதில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாம் நமது விருப்பப்படி இயங்க முடிவதில்லை. நமது சுதந்திரத்தை இது கட்டுப்படுத்துகிறது. குறிப்பிட்ட நிறுவனத்தை, அமைப்பை நம்பி வாழ வேண்டியுள்ளது. இதனால் தன்னம்பிக்கைக்குச் சவால் ஏற்படுகிறது. அது மட்டுமின்றி மாதந்தோறும் தண்ணீர்க் கட்டணம் வேறு செலுத்த வேண்டும். இதுவரை மக்கள் சுதந்திரமாகவும், இலவசமாகவும் பெற்றுவந்த தண்ணீரைக் கட்டுப்பாடுகளோடும், கட்டணம் செலுத்தியும் பெறவேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதே நிலை உணவு சமைக்கப் பயன்படுத்தும் அடுப்பிலும் ஏற்பட்டு இருக்கிறது.

மக்கள் தங்கள் விருப்பத்திற்கும், வசதிக்கும் ஏற்ப அடுப்புகளை அமைத்துக்கொள்வது வழக்கம். இரட்டை அடுப்புகள், ஒற்றை அடுப்பு என மண்பாண்டத் தொழிலாளர்களிடம் இருந்து சூட்டடுப்புகளை வாங்கியோ, மண்ணால் மேடை அமைத்தோ, தரையில் தோண்டியோ அடுப்புகளை அமைத்துக்கொள்வர். மண்பாண்டத் தொழிலாளர்களிடம் இருந்து வாங்கப்பட்ட அடுப்புக்கு மாற்றாக நெல் கொடுப்பதுண்டு. தாங்களாகவே அமைத்துக்கொள்ளும் அடுப்புக்கு எவ்வித செலவுமில்லை. அதுபோலவே அடுப்புக்குத் தேவையான விறகும் செலவின்றியே கிடைக்கும். மட்கிய மரங்கள், வேலிகள், சாணத்தில் இருந்து தயார்செய்யும் வறட்டி, வேலிக்கருவை, வேறெதற்கும் பயன்படாத கருப்பந்தட்டை, தென்னைக் கழிவுகள் (சோலை, பன்னாடை, மட்டை, கொட்டாங்கச்சி)போன்றவற்றையே எரிபொருளாகப் பயன்படுத்துவர். ஆனால் இன்று எரிவாயு நிறுவனத்திடம் அடுப்பையும் எரிபொருளையும் காசுகொடுத்து வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கிராமத்தில் ஒரு தெருவில் ஒரு வீட்டில் எரிவாயு அடுப்பு பயன்படுத்தப்பட்டால் பக்கத்து வீட்டுக்காரர்கள் விறகு அடுப்பைப் பயன்படுத்துவது என்பது அவர்களின் தன்மானப் பிரச்சினையாகிறது. எனவே கடன்பட்டாவது அவர்களும் எரிவாயு அடுப்பு வாங்கியாக வேண்டும். அடுத்ததாக எரிவாயு அடுப்புக்கேற்ப அடுப்பங்கரையை மாற்றியமைக்க வேண்டும். அமர்ந்துகொண்டே காய்கறி அரிந்தபடி சமைத்துப் பழக்கப்பட்ட பெண்கள் இனி நின்றுகொண்டு சமைக்கப் பழகவேண்டும். இப்படிப் பழக்க வழக்கங்களைத் தலைகீழாக மாற்றி உலகம் முழுவதும் ஒரே விதமான பண்பாடு கட்டமைக்கப்படுகிறது. மண்பாண்டங்களைப் பயன்படுத்தும் வழக்கமும் இன்று குறைந்துவருகிறது.

சோறு சமைக்க, வடிக்க, குழம்பு வைக்க, கழிவுநீரை மாற்றி வைக்க என அனைத்திற்கும் மண்பாண்டங்களைப் பயன்படுத்தியவர்கள் எரிபொருளைச் சிக்கனப் படுத்த வேண்டி மண்பாண்டங்களைத் தவிர்த்து உலோகப் பொருட்களையே பயன்படுத்த வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்படுகிறது. அதற்கேற்ப குக்கர், காப்பர் பாட்டம் கிண்ணங்கள், ஒட்டாத தோசைக்கல் போன்ற நவீனப் பொருள்களுக்கு மாற வண்டிய அவசியம் நேரும். மேலும் மண்பாண்டங்களைப் பயன்படுத்துவது குறைந்ததால் மண்பாண்டத் தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அது மட்டுமின்றி ஒரு குறிப்பிட்ட ஊருக்கு ஒரு தொழிலாளர் இருப்பார்.

அவர் அந்த ஊர் மக்களுக்குத் தேவையான சட்டி, பானைகளைச் செய்து கொடுப்பதோடு, திருமணத்தில் வைக்கப்படும் ‘சாலுங்கரவம்’ எனக் குறிப்பிடப்படும் புதுப்பானைகள், அய்யனார் கோயில் குதிரைகள், குலதெய்வப் பூஜைக்கான பானைகள், பொங்கல் பானை ஆகியவற்றையும் செய்து கொடுப்பார். அதற்கு ஏற்ப தானியங்களைப் பெற்றுக்கொள்வார். இவ்விரு மக்களிடையே நிலவும் நல்லுறவும் மண்பாண்டங்களை ஒதுக்குவதனால் பாதிக்கப்படுகிறது. உணவுப் பழக்கம் தொடர்பான ஒரு புழங்கு பொருள் மாற்றத்தினால் சமூகத்தில் இத்தகைய பின்விளைவுகள் ஏற்படுகின்றன.மரப்பொருள்களைப் பயன்படுத்து வதும் இப்போது வெகுவாக குறைந்து வருகிறது. செலவின்றி எளிதாகக் கிடைக்கும் அகப்பையைப் பயன்படுத்துவது குறைந்து உலோக கரண்டிகளைப் பயன் படுத்துவது அதிகரித்துள்ளது.

அன்றாடம் கூழ் கிண்டுவதற்குப் பயன்பட்டு வந்த துடுப்பின் பயன்பாடும் குறைந்து வருகிறது. அப்பளம், அப்பளப்பூ ஆகியவற்றை வீட்டில் செய்து உண்ட நிலை மாறி கடையில் வாங்கி உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளதால், அப்பளக்கட்டை, அப்பளப்பூத் தட்டு ஆகியவற்றின் பயன்பாடும் குறைந்துவருகிறது. இன்னொரு வகையில் அப்பளக் கட்டை இன்று பயன்பட்டு வருகிறது. பூரி, சப்பாத்தி போன்ற உணவுப்பொருட்கள் மக்களிடம் அறிமுகமாகி உள்ளதால் அப்பளக்கட்டை பூரிக்கட்டையாக மாறிவிட்டது. அதற்கும் எளிதில் பூரி தயாரிக்கும் நவீன கருவிகள் மக்களிடம் அறிமுகமாகி உள்ளன. மரப்பொருள்களின் பயன்பாடு குறைவதனால் தச்சர்களுடனான நல்லுறவு குறைந்து வருகிறது. இவ்வாறு நமது புதிய பழக்க வழக்கங்கள் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்திஇருக்கிறது.

- இரத்தின புகழேந்தி.

தனித்துவமான மிளகுப்பொங்கல்!

பொங்கல் சாப்பிட்டாலே தூக்கம் வரும் என்பார்கள். இந்தப் பொங்கலைச் சாப்பிட்டால் தூக்கம் வராது. பொன்னி பச்சை அரிசி, பாசிப்பருப்பு, பெருங்காயம், மிளகு, சீரகம், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், நெய், கோல்டுவின்னர் சேர்த்து செய்யப்படும் இந்த மிளகு பொங்கலின் செய்முறை தனித்துவமானது.

தேவையானவை

250 கிராம் பச்சரிசி

50 கிராம் பாசிப்பருப்பு

1/2 டேபிள் ஸ்பூன் நல்ல மிளகு

1 டீஸ்பூன் சீரகம்

1 டேபிள் ஸ்பூன் நெய்

10 முந்திரிப் பருப்பு

1/2 இஞ்சி

1 டீஸ்பூன் மஞ்சள் தூள்

ஒரு கொத்துக் கறிவேப்பிலை

தேவைக்கேற்ப உப்பு.

செய்முறை

முதலில் பச்சரிசியையும், பாசிப்பருப்பையும் நன்றாகக் கழுவி ஒன்றாக அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு பச்சரிசியையும், பாசிப்பருப்பையும் எடுத்து அதே கோப்பையில் 5 கோப்பை தண்ணீர் ஊற்றி கொஞ்சமாக பெருங்காயத்தூள் போட்டு மூன்று விசில் விட்டால் போதுமானது. பிறகு விசில் அடங்கியதும், அடுப்பைப் பற்ற வைக்காமல் மஞ்சள் தூள், இஞ்சி, மீதமிருக்கும் பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை, சீரகத்தை போட்டுக்கொள்ளவும். தூள் உப்பு பயன்படுத்துவது எளிதான ஒன்று. பிறகு ஒரு எண்ணெய் சட்டியில் எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி அதில் மிளகு வெடித்த பிறகு முந்திரியை பதமாக வறுத்து தயார் செய்து வந்திருந்த குக்கரில் கொட்டி கிண்ட வேண்டியதுதான். தனித்துவமான மிளகுப்பொங்கல் தயார்!மிளகு பொங்கலுக்கு இன்றும் சாம்பார், தேங்காய் சட்னிக்கு மாற்று எதும் தரப்படுவதில்லை சூடான மொறு மொறு மெதுவடையுடன் மிளகு பொங்கல் ஆகச்சிறந்த காமினேசன். 