Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

படியுங்கள்! வெல்லுங்கள்!

வறுமைதான் மனிதனைச் சிந்திக்க தூண்டுகிறது. பலர் வசதியில்லையே, வசதிகளும், வாய்ப்புகளும் இருந்தால் என்னால் முன்னேற முடியும் என்று இல்லாததைப் பற்றி ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். முன்னேற்றத்திற்கு வறுமை ஒரு தடை இல்லை.சாம்பலில் இருந்து உயிர்த்தெழுகின்ற பீனிக்ஸ் பறவையாய் வறுமைதான் வாழ்க்கையில் இருந்து உயிர்த்தெழச் செய்கின்றது. அது மட்டுமல்ல முறையாக வாழவும் கற்றுத் தருகிறது.

அமெரிக்க நாட்டில் ஒரு பெரிய பண்ணையார்.தனது பண்ணை வீட்டில் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிறுவனுக்கு அந்த புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அவனுக்கு ஏற்பட்டது. அவரிடம் சென்றான் ஐயா எனக்கு இரண்டு நாட்கள் இந்த புத்தகத்தை இரவலாக கொடுங்கள், படித்துவிட்டுத் தருகிறேன் என்றான். அவர் அச்சிறுவனின் படிப்பின் மீது கொண்ட ஆர்வத்தைக்கண்டு அவனிடம் புத்தகத்தை கொடுத்தார்.வேகமாகச் சென்றான். நெடுநேரம் அதைப்படிப்பதிலேயே ஆழ்ந்து விட்டான். அவனது தந்தை வயலில் வேலை செய்ய அழைத்த போதுதான் சுய நினைவுக்கு வந்தான்.

உடனே அந்த புத்தகத்தை வீட்டுக் கூரையில் வைத்துவிட்டு தந்தையுடன் வயலுக்குச் சென்றுவிட்டான். வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது பெரிய மழை பெய்யத் தொடங்கியது. அப்போதுதான் சிறுவனுக்கு கூரையில் வைத்து விட்டு வந்த புத்தகத்தின் நினைவு வந்தது. புத்தகம் என்ன ஆனதோ என்ற பதற்றத்துடன் வீட்டுக்கு ஓடி வந்து பார்த்தான். நனைந்து போயிருந்தது புத்தகம்.அழுது கொண்டே பண்ணையாரிடம் போய் நடந்ததை சொன்னான். அதைக்கேட்ட அவர் சரி அந்த புத்தகத்தை நீயே வைத்துக்கொள்.அதற்கு பதிலாக மூன்று நாட்கள் இந்த பண்ணையில் வேலை செய் என்றார்.

அவர் கூறியபடியே கூலிக்காக வேலை செய்து அதற்கு ஈடாக அந்தப் புத்தகத்தை பெற்றுக்கொண்டான். அந்தச் சிறுவன் தான் தன் முயற்சியால் கல்வி கற்று அமெரிக்கா நாட்டின் ஜனாதிபதியாகத் உயர்ந்தவர். அவர்தான் ஆபிரகாம் லிங்கன்.

வறுமையில் பிறப்பது உன் தவறல்ல, வாழ்நாள் முழுவதும் வறுமையோடு இருப்பது தான் உன் தவறு என்கிற சிந்தனை தான் நினைவுக்கு வருகிறது. இவர்கள் மட்டுமா, எத்தனையோ பேர் வறுமையான சூழலில் இருந்து வாழ்க்கையில் உயர்ந்திருக்கின்றார்கள். விடுதியில் பணம் கட்டி படிக்க முடியாமல் அரசின் இலவச உணவை சாப்பிட்டு படித்து வாழ்வில் உயர்ந்தவர் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்.அக்கரையில் உள்ள பள்ளிக்குச் செல்ல படகுக்காரனுக்கு தினம் காசு கொடுக்க வசதி இல்லாததால் ஆற்றை நீந்தியே கடந்து கல்வி கற்ற லால் பகதூர் சாஸ்திரி. காரல் மார்க்ஸ், ஷேக்ஸ்பியர், சார்லஸ் டிக்கன்ஸ் இப்படி பலர் கல்வி என்கிற ஒன்றை இறுகப்பற்றிக் கொண்டு வாழ்வில் உயர்ந்திருக்கின்றார்கள்.

வாழ்க்கை எனும் கடலை நம்பிக்கை என்னும் படகின் துணையோடு கடந்தவர்கள் வெற்றியை எளிதில் பெறுகிறார்கள்.நம்பிக்கைதான் நமது வாழ்க்கையில் ‘அச்சாணி’யாக அமைகிறது. எந்த ஒரு இயக்கத்திற்கும் அந்த நம்பிக்கைதான் துணையாக அமைகிறது. வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொண்டவர்கள்,எந்த சவால்களையும் எளிதில் எதிர்கொள்ள முடியும்.

கஷ்டங்கள் வரும்போது கவலைப்படு வதும்,கண்ணீர் விடுவதும் கலங்கிப்போன இதயத்தோடு வாழ்க்கையை நகர்த்துவதும் வாடிக்கையாகக் கொண்டவர்கள் நம்பிக்கை இழந்தவர் வரிசையில் முதலிடத்தைப் பெறுகிறார்.

இளம்பருவத்தில் இருந்து நம்பிக்கையோடு வாழ பழகிக்கொள்வது மாணவ மாணவிகளுக்கு அவசியமான ஒன்றாகும். இதன் மூலம் அவர்கள் தங்கள் இலட்சியத்தை நிறைவேற்றவும் இயலும் வாழ்க்கையில் நம்பிக்கை இழக்கும்போது தோல்விகள் கைகோர்த்து நம்மை தாக்குகின்றன. ஆனால் நம்பிக்கையோடு வாழ்க்கையை வாழக்கற்றுக் கொள் பவர்களை வெற்றி அவர்களின் கைகளை இறுகப் பற்றி அழைத்து செல்கிறது.

விதி ஒரு கதவை மூடினால் நம்பிக்கை இன்னொரு கதவைத் திறக்கிறது என்பார்கள்.அந்த நம்பிக்கைகொண்டு வறுமையை விரட்டியவர்கள் உலக வரலாற்றில் பலர் உண்டு. அவர்கள் அந்த வறுமையை எதைக்கொண்டு விரட்டினார்கள் தெரியுமா?

நம்பிக்கையைத் தருவது நல்ல கல்வி தான்,அந்த கல்வி என்ற ஒன்றை உளியைக் கொண்டு வறுமை என்கின்ற கருங்கல் பாறையை உடைத்து இருக்கின்றார்கள். இதற்கு உதாரணமாய் இந்த சாதனைப்பெண்மணியைச் சொல்லலாம்.

கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி காசிராமன் தெரு ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அத்துடன் 19 குழந்தைகள் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த குழந்தைகளின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஜூலை 16-ம் தேதி அனுசரிக்கப்பட்டுவருகிறது.

இந்த விபத்து நிகழ்ந்த பள்ளியில் சிறுமி ஜெனிபர் 4-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். விபத்து நடந்த நேரத்தில் பள்ளியின் மேல் தளத்தில் இருந்து தரைத்தளத்திற்கு வந்ததால், இந்த தீ விபத்தில் இருந்து உயிர் தப்பினார். ஆனாலும் பலர் அந்த தீயில் கருகி உயிரிழந்தனர்.இந்த சம்பவம் ஜெனிபர் மனதில் பெரும் வலியை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து அவர் மேற்கொண்ட மீட்புப்பணிகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர் ஆற்றிய ஆறுதல் மற்றும் உடனடி உதவிகள் ஆகியவை ஜெனிபரின் மனதில் ஆழமாகப்பதிந்தன, இந்த சம்பவம் அவர் மனதில் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற இலட்சியத்தை உருவாக்கியது.

2004-ஆம் ஆண்டு தமிழகத்தை உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவம் இன்னும் பலரின் நினைவுகளில் நீங்காமல் உள்ளது. அந்த கோரவிபத்தில் 94 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், உயிர் தப்பிய மாணவர்களில் ஒருவரான ஜெனிபர், இன்று தனது விடாமுயற்சியால் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 15-வது இடத்தைப் பெற்று துணை மாவட்ட ஆட்சியராக (Deputy Collector) பொறுப்பேற்கத் தயாராகி உள்ளார்.

அன்றைய தினத்தை நினைவுகூரும் ஜெனிபர், என் தோழிகளின் பெற்றோர் என்னைப் பார்க்கும் போதெல்லாம் கட்டிப்பிடித்து அழுவார்கள்.என் மகளும் இன்று உன் வயதில்தான் இருந்திருப்பாள் என்று அவர்கள் கூறும்போது மனம் உடைந்து போகும் என்று ஜெனிபர் உருக்கமாக நினைவுகூர்கிறார்.

பின்னர் ஸ்ரீ மாதா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ்-2 வரை படித்து 1094 மதிப்பெண்கள் பெற்றார். பொருளாதாரச்சிக்கல்களால் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்ய முடியாமல், சென்னை சென்று கணிதத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார்.

குடும்பப்சூழல் காரணமாகப் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களில் சேர முடியாத நிலையில், வீட்டுப்பாடம் நடத்தி கிடைத்த வருமானத்தில் தேர்வுக்கு தயாராகியுள்ளார்.2017-ஆம் ஆண்டு தொடங்கிய அவரது போட்டித் தேர்வு பயணம், பல ஆண்டுகளின் கடின உழைப்புக்குப் பிறகு வெற்றியைத் தந்தது.

குரூப்-1 முதன்மைத் தேர்வுக்காக சென்னை அண்ணா நகரில் உள்ள படிப்பு மையங்களில் நண்பர்களுடன் இணைந்து தயாரானதாகவும், பல ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் உறுதுணையாக இருந்ததாகவும் அவர் கூறுகிறார். இறுதியாக குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 15-வது இடம்பெற்று துணை மாவட்ட ஆட்சியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு பள்ளி களில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்தவும், கல்வி நிறுவனங்களில் பாதுகாப்புக கட்டமைப்புகள் முறையாக இருக்க உறுதி செய்யவும் விரும்புவதாக ஜெனிபர் தெரிவித்துள்ளார்.

தனது வெற்றிக்குப் பின்னால் மிகப்பெரிய சக்தியாக இருந்தவர் தாயார் சுஜாதா என அவர் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற அழுத்தங்கள் வந்தபோதும், என் மகள் பெரிய அதிகாரியாக வரவேண்டும் என்று என்னைத்தொடர்ந்து படிக்கவைத்தது என் அம்மாதான் என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

வறுமை, சமூக பின்னணி போன்ற காரணங்களால் யாரும் தங்களை குறைத்து மதிக்க வேண்டாம். வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியும் விடாமுயற்சியும் இருந்தால் வாய்ப்புகள் தானாக உருவாகும். நம்பிக்கையை மட்டும் ஒருபோதும் கைவிடாதீர்கள் என்று ஜெனிபர் கூறுகிறார்.

நல்ல நம்பிக்கையோடுகூடிய தன்னம்பிக்கை கொண்டவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த இலட்சியத்தை அடைகின்றார்கள். இவர்கள்தான் சோதனைகளைச்சாதனைகளாக மாற்றும் ஆற்றல் படைத்தவர்களாக இருக்கின்றார்கள்.

வெற்றி பெற்ற ஜெனிபரின் வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தால், அவர் எத்தகைய சோதனைகளைச்சந்தித்துள்ளார் என்பது தெளிவாகப் புரிகிறது.அதே சமயம், அந்த சோதனைகளைச்சாதனைகளாக மாற்றியது கல்வி என்பதும் நமக்குப்புலப்படுகிறது. இன்றைய இளைஞர்களுக்கு, “படித்தால் வெல்லலாம்” என்பதே இவரின் வாழ்க்கையை உணர்த்தும் உயர்ந்த பாடமாகும்.