ஆர்.சி.புக், ஓட்டுநர் உரிமத்தை டிஜிட்டல் முறையில் பொதுமக்கள் தாங்களே பதிவிறக்கம் செய்யலாம்: முதல்வர் விஜய் அறிவிப்பு
சென்னை: முதல்வர் விஜய் நேற்று 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பு: ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச்சான்று (ஆர்.சி.புக்) பெறுவதற்கு கட்டணமாக 250 ரூபாய் விண்ணப்பதாரர்களால் செலுத்தப்பட்டு, சிப் பொருத்தப்பட்ட அட்டைகளாக தபால் மூலம் விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் விண்ணப்பதாரர்களுக்கு கிடைப்பதற்கு ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை காலதாமதம் ஏற்படுகிறது. இந்த காலதாமதத்தை தவிர்க்கும் வகையில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச்சான்றிதழ் ஆகியவை டிஜிட்டல் முறையில் பொதுமக்கள் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளும் நடைமுறை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படும்.
*மாநிலம் முழுவதும் 15.9.2026 முதல், ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் டிஜிட்டல் முறையில், அதாவது டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் டிஜிட்டல் ரிஜிஸ்ட்ரேசன் சர்ட்டிபிகேட் வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.
* மின்னணு வாகனப் பதிவுச்சான்றிதழ் முறை அறிமுகம் செய்வதன்மூலம், புதிய வாகனம் வாங்குவோர், வாகனப் பதிவை அதாவது, டிஜிட்டர் ஆர்சி-யை இணையம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



