Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அரிய வழக்கில் தீர்ப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது இவ்வழக்கு முழுமை அடைந்து 157 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு டிச. 23ம் தேதி இரவு, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சக மாணவருடன் பேசிக் கொண்டிருந்த ஒரு மாணவி பாலியல் தொந்தரவு செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை கமிஷனர் அருண் உடனடியாக தனிப்படைகள் அமைத்து, தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினார்.

புகாரளித்த 24 மணிநேரத்தில் பாலியல் தொல்லை அளித்த ஞானசேகரன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மிகவும் அரிதாக கருதப்பட்ட இந்த வழக்கில் தமிழக காவல்துறை மீது தேவையற்ற குற்றச்சாட்டுகள் எதிர்கட்சிகள் தரப்பில் கூறப்பட்டாலும், காவல்துறை இந்த வழக்கை சரியான திசையில் எடுத்துச் சென்றது. ஞானசேகரன் மீது ஏற்கனவே திருட்டு, கொள்ளை வழக்குகள் இருந்தன. இதனடிப்படையில் குண்டர் சட்டத்திலும் ஞானசேகரன் கைதானார். அதிர்வை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தானாகவே முன்வந்து சென்னை ஐகோர்ட் விசாரணைக்கு எடுத்தது.

வழக்கு தொடர்பான விசாரணைக்காக 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவையும் நியமித்து உத்தரவிட்டது. புகாரளித்த 2 மாதங்களில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு, பிப். 24ம் தேதி 100 பக்கம் அடங்கிய குற்றப்பத்திரிகை சைதாப்பேட்டை 9வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறை தரப்பிலும் பல்வேறு சாட்சியங்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

விசாரணையின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை, பெண்ணை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்தல், ஆதாரங்களை அழித்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 12 பிரிவுகளின் கீழ் ஞானசேகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யபட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் ஞானசேகரன் 11 பிரிவில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். தண்டனை விபரங்கள் ஜூன் 2ம் தேதி அறிவிக்கப்படும் என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சம்பவம் நடந்த 157 நாட்களுக்குள் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது பாராட்டிற்குரியது. ஏற்கனவே கடந்த 2019ல் நடந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் நடந்த இவ்வழக்கில் பல சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டன. அதிமுக முக்கிய பிரமுகரின் குடும்ப உறுப்பினருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

இவ்வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு வழங்கப்பட்டாலும், சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது வரவேற்பை பெற்றது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் தன் தரப்பில் தண்டனையை குறைக்க வேண்டுமென கோரியுள்ளார். ஆனால், இதுபோன்ற பாலியல் தொல்லை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தண்டனையை கடுமையாக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. அப்போதுதான் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அச்சம் ஏற்படும்.

மேலும், இதுபோன்ற வழக்குகளில் எதிர்க்கட்சிகள் தங்கள் தரப்பில் தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறி திசை திருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டுமென்பதில் யாருக்குமே மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இதுபோன்ற விவகாரங்களில் அரசியல் தவிர்த்து, காவல்துறைக்கு உதவ வேண்டுமென்பதே அனைவரது ஒருமித்த எண்ணமாகும்.