Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ரூ.4,000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ராமாயணம் படத்தின் இணையதள திருட்டுக்கு தடை: நாளை மறுநாள் ரிலீஸ் ஆகும் நிலையில் ஐகோர்ட் அதிரடி

மும்பை: ரூபாய் 4,000 கோடி பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள ராமாயணம் திரைப்படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக திருட்டுத்தனமாக வெளியிடுவதற்கு மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராமாயணம் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகள், கடுமையான ரகசிய ஒப்பந்தங்களை மீறி சமூக வலைதளங்களில் விஷமிகளால் திருட்டுத்தனமாக கசியவிடப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், ரூபாய் 2,000 கோடி செலவில் முதல் பாகமும், ஒட்டுமொத்தமாக ரூபாய் 4,000 கோடி மெகா பட்ஜெட்டிலும் தயாராகியுள்ள இப்படம் வரும் 5ம் தேதி (நாளை மறுநாள்) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் கதை, காட்சிகள், பாடல்கள் உள்ளிட்ட அனைத்து காப்புரிமைகளையும் தன்வசம் வைத்துள்ள காட்பவர் மீடியா நிறுவனம், இணையதள திருட்டு கும்பல்களிடமிருந்து படத்தைப் பாதுகாக்க கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ் ஜாம்தார், தயாரிப்பு நிறுவன தரப்பிற்கு உண்மையான மற்றும் நியாயமான அச்சம் இருப்பதாக சுட்டிக்காட்டி, அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் படத்தை அனுமதியின்றி வெளியிட கடுமையான இடைக்கால தடை விதித்தார்.

மேலும், காப்புரிமையை மீறும் இணைய முகவரிகள் குறித்து தகவல் கிடைத்ததும் அவற்றை உடனடியாக முடக்கி நீக்க வேண்டும் என்று இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும், கூகுள் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கும் நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது.