ஆசிரியர் ரமணி குத்தி கொலை; கைதானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி, செல்வப்பெருந்தகை அறிக்கை
சென்னை: தஞ்சை மாவட்டத்தில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி, செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். ஆசிரியர் ரமணியின் கொலை வழக்கில் கைதாகியுள்ளவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சட்டம்- ஒழுங்கை காப்பதில் கவனம் செலுத்த வலியுறுத்துகிறேன்.
செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் தலைவர்): மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை குத்தி கொல்லப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இைத வன்மையாகக் கண்டிக்கிறேன். இது மிகுந்த வேதனையை தருகிறது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுபோன்ற இடங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தமிழக காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையையும், தகுந்த பாதுகாப்பையும் வழங்க வேண்டுமென தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): தஞ்சை மாவட்ட அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. அரசுப்பள்ளி வளாகத்துக்கு உள்ளேயே ஒரு ஆசிரியை கொலை செய்யப்பட்டது ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு அரசுப்பள்ளிகளை கண்காணிப்பதும், தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசிய பணியாகும். இது போன்ற ஒரு சம்பவம் இனிமேல் நடைபெறாமல் இருக்க, குற்றச்செயல்கள் தொடராமல் இருக்க காவல்துறையின் நடவடிக்கையும், குற்றத்திற்கான தண்டனையும் காலம் தாழ்த்தாமல் கிடைக்க செய்ய வேண்டும். உயிரிழந்த ஆசிரியையின் குடும்பத்தினருக்கு தமாகா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.


