ராமதாஸை சுற்றி துரோகிகளே உள்ளனர் வன்னியர் சங்க இடஒதுக்கீட்டுக்கு எதிராக துரோகம் செய்தவர் ஜி.கே.மணி: அன்புமணி ஆவேசம்
சென்னை: பாமக சார்பில் ஒன்றிய, நகர, பேரூர், மாநகராட்சி செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையொட்டி உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில், பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நேற்று காலை நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: மருத்துவர் ராமதாசை இந்த துரோகிகள் எந்த மனநிலையில் கொண்டு வந்து விட்டார்கள் என பாருங்கள். இந்த துரோகிகளை ஒருபோதும் சும்மா விடமாட்டேன். நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கும். இன்னும் 3 மாதத்தில் யார், யார் ஜெயிலுக்கு போக போகிறார்கள் என்பதை பார்க்கப் போகிறீர்கள்.
ராமதாசிடம், தினமும் பொய்யை சொல்லி, சொல்லி ஏமாற்றி வருகிறார்கள். டெல்லியில் ஒரு போராட்டம் நடத்தினார்கள். அதில் மொத்தம் 30 பேர் தான் இருந்தார்கள். ராமதாசிடம் 3 ஆயிரம் பேர் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பொய் சொல்லி இருக்கிறார்கள். தர்மபுரியில் நாம் நடத்திய கூட்டத்தில் 500 பேர் தான் இருந்தார்கள் என பொய் சொல்லி இருக்கிறார்கள். என்னை தலைவராக்கிய அடுத்த நாளிலிருந்து ஜி.கே.மணி சூழ்ச்சியை ஆரம்பித்து விட்டார். தர்மபுரியில் 3 நாள் நடை பயணம் மேற்கொண்டிருந்தேன். துரோகிகள் சிலர் ராமதாசிடம் சென்று, காசு கொடுத்து கூட்டத்தைக் கூட்டி வந்தார்கள் என பொய் சொல்லி இருக்கிறார்கள். உங்கள் படத்தை சிறியதாக போட்டு விட்டார்கள் என ஜி.கே.மணி சூழ்ச்சி செய்ய தொடங்கி விட்டார்.
ஜி.கே.மணி போன்றோர் மனிதர்களாக இருக்கவே தகுதி இல்லாத நபர்கள். ராமதாசிடம், என்னைப் பற்றி தவறான விஷயங்களை எல்லாம் சொல்லி இருவருக்கும் பகையை உருவாக்கியது ஜி.கே.மணி தான். வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக துரோகம் செய்தவர் ஜி.கே.மணி. ராமதாசை சுற்றி இருப்பவர்கள் துரோகிகள். பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னமும், கட்சியும் நம்மிடம் தான் உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய போராட்டத்தை செய்திருந்தால், திமுக இன்றைக்கு இட ஒதுக்கீட்டை கொடுத்திருப்பார்கள். ஆனால், ஜி.கே.மணி தடுத்து விட்டார். இந்த சமுதாயத்திற்கு இவ்வளவு துரோகம், சூழ்ச்சி செய்தவர் ஜி.கே.மணி.
என் மனதில் இன்னும் நிறைய உள்ளது அதையெல்லாம் சொல்ல வேண்டாம் என நினைக்கிறேன். பாமகவை கைப்பற்ற நாம் எந்த தவறும் செய்யவில்லை. தவறு செய்தது அவர்கள் தான். சட்ட ரீதியாகவும், கட்சி விதிகளின்படியும் பாமக நம்மிடம் தான் உள்ளது. அவர்கள் உரிமையியல் நீதிமன்றம் சென்றால் வழக்கு 7 ஆண்டுகள் வரை கூட நடக்கும். எனவே, நீங்கள் தெளிவாக இருங்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் அங்கம் வைக்கும் கூட்டணி வெற்றி பெற களத்தில் இறங்கி பாடுபட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். என்னை தலைவராக்கிய அடுத்த நாளில் இருந்து ஜி.கே.மணி சூழ்ச்சியை ஆரம்பித்து விட்டார்.


