Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ராமர் கோயில் நன்கொடை திருட்டு வழக்கில் எஸ்ஐடி குற்றப்பத்திரிகை தாக்கல்: உள்ளூர் நீதிமன்றமே விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு உள்ளூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கை உள்ளூர் நீதிமன்றமே விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நன்கொடை பணம் திருட்டு, ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் நிதி நிர்வாகத்தில் குளறுபடி நடப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை மாநில பாஜ அரசு அமைத்தது.

இந்த மாநில சிறப்பு புலனாய்வு குழுவினர் வழக்கு விசாரணையை முழுமையாக முடித்துள்ள நிலையில், 8 குற்றவாளிகளுக்கு எதிராக அயோத்தி உள்ளூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி.மோகனா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது உத்தரபிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ராமர் கோயிலில் நன்கொடைகளை எண்ணும்போது சிலர் நன்கொடைகளை கையாடல் செய்துள்ளனர். இதில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் கையாடல் செய்த பணத்தை வைத்து சொத்துகள் வாங்கி உள்ளனர். சிலர் வங்கிகளில் வைப்பு தொகையாக சேமித்து வைத்துள்ளனர். இதனை சிறப்பு புலனாய்வு குழு கண்டறிந்துள்ளது. இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் உள்ளூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்” என்று தெரிவித்தார். இந்த தகவல்களை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கு தொடர்பாக தன் முன் இருந்த மனுக்களை முடித்து வைத்தது. மேலும், இந்த வழக்கு விசாரணையை அயோத்தியில் உள்ள உள்ளூர் குற்றவியல் நீதிமன்றமே சட்டப்படி தொடர்ந்து நடத்தலாம் என உத்தரவிட்டது.

அத்துடன், இந்த வழக்கில் பொதுநலன் கலந்துள்ளதால், உச்ச நீதிமன்றத்தை நாடிய மனுதாரர்கள், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இருக்கும் சட்டப்பூர்வ உரிமையை போல உள்ளூர் நீதிமனந்ற விசாரணைக்கு தங்கள் தரப்பு உதவிகளை வழங்கலாம் என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு அனுமதி அளித்துள்ளது. மேலும், ராமர் கோயில் அமைந்துள்ள நிலம், அயோத்தி தொடர்பான முதன்மை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட நிலப்பகுதியில்தான் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.