Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ராஜஸ்தான் மகத்தான வெற்றி குஜராத்தை வேட்டையாடிய வைபவ்

ஜெய்ப்பூர்: குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 14 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷியின் இமாலய சதத்தால் ராஜஸ்தான் அணி மகத்தான வெற்றி பெற்றது. ஐபிஎல் 18வது தொடரின் 47வது லீக் போட்டி, ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. அதில், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய குஜராத் அணியின் சாய் சுதர்சன், சுப்மன் கில் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் துவக்கம் முதல் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 34 பந்துகளில் இந்த இணை, அவுட்டாகாமல் 50 ரன்களை குவித்தது. 10வது ஓவரில் சுப்மன் கில் அரை சதம் கடந்தார். இந்நிலையில், தீக்சனா வீசிய 11வது ஓவரில், சாய் சுதர்சன்(30 பந்து, 39 ரன்) ஆட்டமிழந்தார். அதையடுத்து, கில்லுடன், ஜோஸ் பட்லர் இணை சேர்ந்தார். குஜராத் அணி, 11.4 ஓவரில், 100 ரன்னை எட்டியது. அடுத்த இரு ஓவர்களில் ரன் குவிப்பில் சுணக்கம் ஏற்பட்ட நிலையில், 15வது ஓவரில் ராஜஸ்தான் பந்து வீச்சை வெளுத்து வாங்கிய பட்லர், 23 ரன்களை வேட்டையாடினார்.

அதைத் தொடர்ந்து, தீக்சனா வீசிய 17வது ஓவரில் கில்(50 பந்து, 4 சிக்சர், 5 பவுண்டரி, 84 ரன்) அவுட்டானார். அதன்பின், பட்லருடன் வாஷிங்டன் சுந்தர் இணை சேர்ந்தார். இந்த இணை, ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 18வது ஓவரில் அதிரடியாக ஆடி, 19 ரன்கள் குவித்தது. அடுத்த ஓவரில், சுந்தர்(13 ரன்) ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ராகுல் தெவாதியா(9 ரன்) சிறிது நேரத்தில் எல்பிடபிள்யு முறையில் வெளியேற, ஷாருக்கான் ஆட வந்தார். 20 ஓவர் முடிவில், குஜராத் அணி, 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன் குவித்தது. ஜோஸ் பட்லர் 50, ஷாருக்கான் 5 ரன்னுடன் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில், தீக்சனா 2, ஆர்ச்சர், சந்தீப் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 210 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

துவக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், 14 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷியும் ஆட்டத்தை துவக்கினர். இருவரும் ரன் மிஷினாய் மாறி ரன்களை குவித்தனர். வைபவ் 38 பந்துகளில், 11 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 101 ரன் குவித்து அவுட் ஆனார். அப்போது, 11.5 ஓவரில் அணியின் ஸ்கோர் 166. பின், 15.5 ஓவரில் ராஜஸ்தான் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 70,ரியான் பராக் 32 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இப்போட்டியில் வைபவ் 35 பந்துகளில் சதம் அடித்தார். இது ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.