Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விவசாயத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம்!

புதுச்சேரி மாநிலத்தில் சோலார் மூலம் இயங்கும் மின் மோட்டார் அமைக்கும் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம், அரசுப்பள்ளியில் காய்கறித் தோட்டம் அமைத்தால் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை, விவசாயக் கூலித்தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.1000 என சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த வாரம் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அம்மாநிலத்தின் வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்

இந்திய உணவுக் கழகத்தின் மூலம் புதுச்சேரி, காரைக்காலில் 30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான குறைந்தபட்ச தரத்தை மேம்படுத்த ஆகும் கூடுதல் செலவை ஈடு செய்யும் வகையில் கிலோ ஒன்றுக்கு ரூ.2 வீதம் மானியமாக வழங்கப்படும். நாட்டிலேயே முதன்முறையாக புதுச்சேரியில் பரிசோதனை அடிப்படையில் 100 விவசாயிகளுக்கு சூரிய சக்தியில் இயங்கும் மின் மோட்டார்கள் வழங்கப்படவுள்ளன. சூரிய மின்சக்தி (சோலார்) மின் மோட்டார் அமைக்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு 30 சதவீதமும், மாநில அரசு 70 சதவீதமும் மானியம் வழங்க உள்ளன. மேலும் புதுவையில் 500 ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து மின் மோட்டார் அமைக்கவும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படவுள்ளது.

என் வீடு என் நலம் திட்டம் என்ற திட்டத்தில் நகரில் மாடி வீட்டுத் தோட்டம் அமைக்க ரூ.5 ஆயிரமும், அரசுப் பள்ளிகளில் 4,000 சதுர அடியில் காய்கறித் தோட்டம் அமைத்தால் ரூ.10 ஆயிரமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குழாய்க் கிணறு அமைக்கவும், நீர்மூழ்கி மோட்டார் பொருத்தவும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியத்தைப் பெறுவதற்கு, தற்போதுள்ள நில உச்சவரம்பு பொது விவசாயிகளுக்கு ஒன்றரை ஏக்கரில் இருந்து ஒரு ஏக்கராகவும், அட்டவணை விவசாயிகளுக்கு ஒரு ஏக்கரில் இருந்து அரை ஏக்கராகவும் குறைக்கப்படும். ஐஎஸ்ஐ தரமுள்ள பிவிசி நிலத்தடி நீர்ப்பாசனக் குழாய்கள் அமைக்க ஹெக்டேருக்கு அதிகபட்ச மானியத் தொகையாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு முதல் அந்த தொகை ரூ.45 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

பருத்தி பயிர் செய்யும் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.3 கூடுதலாக வழங்கப்படும். விவசாயிகள் விளைவிக்கும் பருத்தியை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்காலில் கருவேல மரங்களை அகற்றி, அந்த நிலங்களை சாகுபடிக்கு ஏற்றவாறு தயார் செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும். விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ஆண்டுதோறும் நவம்பரில் ரூ.1000 வழங்கப்படும். இந்தாண்டு நிவாரணத் தொகை நவம்பர் மாதம் வழங்கப்படும். காரைக்கால் மாவட்டத்தில் மாநில அரசின் வேளாண்மைப் பல்கலைக்கழகம் (பஜன்கோ) அமைக்கப்படும். வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையில் காலியாக உள்ள 33 வேளாண் அலுவலர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும். விவசாயிகளுக்கு ரூ.2.5 கோடியில் ஆயிரம் கறவைப் பசுக்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். கால்நடைகளுக்கு இல்லம் தேடிச் சென்று தீவனம் வழங்கப்படும். ரூ.26 லட்சம் மதிப்பில் காப்பீடு செய்யாத கறவைப் பசுக்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.ஒப்பந்த அடிப்படையில் புதிதாக 33 கால்நடை மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்காக ரூ.1.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கால்நடை இன அபிவிருத்தி கிளை நிலையங்கள் சிறு கால்நடை மருந்தகமாக தரம் உயர்த்தப் படும். ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவர்கள் விரைவில் பணி அமர்த்தப்படுவர். இதுபோன்ற அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன.

*புதுச்சேரியில் ஏற்கனவே மீனவர்களுக்கு மழைக்கால நிவாரணம், மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது. தற்போது முதன்முறையாக விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

* காவிரி நீர் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு பாய்வதைப் போல புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் பாய்கிறது. இதனால் காவிரி நீர் காரைக்காலையும் வளப்படுத்துகிறது.

* தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் என நாம் குறிப்பிடுகிறோம். அதேபோல புதுச்சேரியின் நெற்

களஞ்சியமாக அங்குள்ள பாகூர் பகுதி விளங்குகிறது. இந்தப் பகுதியில் உள்ள ஒரு ஏரி பல ஏக்கர்

நிலங்களுக்கு பாசனம் தருகிறது.

*புதுச்சேரியில் சில அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் காய்கறிச் செடிகள், மூலிகைச் செடிகள் உள்ளிட்டவை பயிர் செய்யப்பட்டுள்ளன. இதில் லாஸ்பேட்டையில் உள்ள வள்ளலார் அரசுப்பள்ளியில் சிறப்பான முறையில் தோட்டம் அமைக்கப்பட்டு காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. இந்த தகவல் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.