காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே, தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக தேக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 ஆயிரம் நெல் மூட்டைகள், நேற்று இரவு பெய்த கனமழையால் நனைந்து சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சாலவாக்கம் அருகே உள்ள மாமகம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் கொள்முதல் செய்யப்பட வேண்டிய நெல் மூட்டைகள் நீண்ட நாட்களாக தேக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு பெய்த கனமழையால் நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்து சேதமடைந்துள்ளன. அதிகாரிகள் உரிய நேரத்தில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லாமல் மெத்தனமாக செயல்பட்டதே இதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விவசாயிகள் பலர் நகைகளை அடகு வைத்து கடன் பெற்று விவசாயம் செய்து வரும் நிலையில், அறுவடை செய்த நெல் மணிகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளதால் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
எனவே, மழையால் பாதிக்கப்பட்ட நெல் மூட்டைகளை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



