ரயில் நிலைய நடைமேடைகளில் சிக்கி பல்லாயிரம் பயணிகள் உயிரிழப்பதை சாதாரண விஷயமாக எடுக்கமுடியாது: ரயில்வேக்கு ஐகோர்ட் மதுரை கிளை கண்டனம்
மதுரை: ரயில் நிலைய நடைமேடைகளில் சிக்கி பயணிகள் உயிரிழப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என ஐகோர்ட் மதுரை கிளை கூறியுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஜஹாங்கீர் பாதுஷா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: இந்தியாவில் போக்குவரத்திற்காக அதிக பயன்படுத்தப்படும் துறை ரயில்வே துறையாக உள்ளது. ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே அதிக இடைவெளி உள்ளது. இதனால், ரயில் பயணிகள் சிக்கி அதிகளவில் இறப்புகள் ஏற்பட்டுள்ளது. பலர் உடல் உறுப்புகள் பாதிக்கும் நிலை உள்ளது. இந்தியாவில் கடந்த 2022 மார்ச் மாத கணக்கின்படி, ரயில் மேடை இடைவெளியில் சிக்கி மட்டும் சுமார் 41,596 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரயில்வே பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயிலுக்கும், ரயில் நடைமேடையில் உள்ள இடைவெளியில் சிக்கி மட்டும் 39,015 பயணிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரயில் நடைமேடைகளில் சிக்கியவர்களை மீட்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் உள்ளது. எனவே, பயணிகளின் பாதுகாப்பு கருதி டெல்லி, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய நடைமேடையை போல் அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடையின் இடைவெளியை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும், முதற்கட்டமாக பயணிகளை அதிகம் கையாளும், முக்கிய ரயில் நிலையங்களில் இந்த சீரமைப்பை தொடங்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த், நீதிபதி குமரப்பன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஹாருன் ரசீத் ஆஜரானார். ரயில்வே தரப்பில், இந்த விவகாரம் ஒன்றிய அரசின் கொள்கை ரீதியானது. இதில் மனுதாரர் நிவாரணம் கோர முடியாது என கூறப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘‘நடைமேடை இடைவெளியில் சிக்கி பல்லாயிரம் பயணிகள் உயிரிழந்துள்ளனர். எனவே, இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. உயிரிழந்தவர்கள் சாதாரண பொதுமக்களே. எனவே, அந்த நடவடிக்கையை ரயில்வே நிர்வாகத்தின் கொள்கை முடிவாக ஏற்க முடியாது. இந்த வழக்கில் இந்திய ரயில்வே வாரியத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறது. இந்த விவகாரத்தில் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பது குறித்து இந்திய ரயில்வே வாரியம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
