Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ரயில்வே ஊழியர்களுக்கும் தபால்வாக்கு கோரி வழக்கு: தேர்தல் ஆணையம், ரயில்வே பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ரயில்வே துறை ஊழியர்களுக்கும் தபால் வாக்கு செலுத்தும் வசதியை வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கும், தெற்கு ரயில்வேக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் ராணுவம், துணை ராணுவப்படை வீரர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஊடகத்தினர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த அனுமதியளிக்கப்படுகிறது. இதில் ரயில்வே தொழிலாளர்கள் சேர்க்கப்படவில்லை. எனவே, ரயில்வே தொழிலாளர்களையும் தபால் வாக்கு செலுத்த அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மதுரை கோட்டத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றும் ராம்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், கேரளாவில் ரயில்வே துறையினருக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. ரயில் ஓட்டுனர்கள், ரயில் நிலைய அதிகாரிகள், பயணச்சீட்டு பரிசோதகர்கள் வாக்கு செலுத்த விடுப்பு எடுக்க இயலாது. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ரயில்வே துறை ஊழியர்கள் தபால் வாக்கு அளிக்க அனுமதிக்கப்பட்டதால், மக்களவை தேர்தலிலும் தபால் வாக்களிக்க அனிமதிக்க வேண்டும் எனக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் பரிசீலிக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், தபால் வாக்கு பதிவுக்கு அனுமதியளிப்பது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. தபால் வாக்கு பதிவு செய்ய விண்ணப்பிக்க மார்ச் 25ம் தேதி கடைசி நாள் என்பதால் இனிமேல் அனுமதிக்க இயலாது என்று விளக்கம் அளித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ரயில்வே துறை தரப்பில் தான் தவறு நடந்துள்ளது. இந்த மனுவுக்கு ஏப்ரல் 10ம் தேதிக்குள் தேர்தல் ஆணையமும், தெற்கு ரயில்வேயும் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.