Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருப்பதி கோயில் அதிகாரி வீட்டில் சோதனை: 2 கிலோ தங்கம், ரூ.5 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கின!

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கோயில் துணை நிர்வாக அதிகாரி (Deputy EO) மெண்டு லோகநாதம் என்பவருக்குச் சொந்தமான இடங்களில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடைபெற்றது.

திருப்பதி மற்றும் திருமலையில் உள்ள அவரது வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்களின் வீடுகள் உட்பட 7 இடங்களில் நேற்று காலை 20 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு குழுவினர் அதிரடிச் சோதனை நடத்தின. திருப்பதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இருந்த அவரது வங்கி லாக்கர்களும் சோதிக்கப்பட்டன.

அவர் கடந்த காலங்களில் தேவஸ்தானத்தில் பல்வேறு பதவிகளிலும் பணியாற்றியுள்ளார். இவர் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவர் மீது கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில் அவர் வீட்டில் இருப்பதை உறுதி செய்த அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி தனது அறியப்பட்ட வருமான ஆதாரங்களுக்கு அப்பாற்பட்ட சொத்துக்களை வைத்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்து அதற்கான ஆவணங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சொத்துக்களின் அளவு மற்றும் அவற்றின் ஆதாரங்களைக் கண்டறிய, ஏசிபி அதிகாரிகள் சொத்து ஆவணங்கள், தங்கம், நிதி தொடர்பான பதிவுகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை ஆய்வு செய்தனர். முதற்கட்ட மதிப்பீட்டின்படி, சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும், 2 கிலோ தங்கம் (1.42 கிலோ எடையுள்ள தங்கப் பாத்திரம் உட்பட) மற்றும் 6.5 கிலோ வெள்ளி பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஆந்திரப் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளது .

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வழங்கப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் சிபிஐ நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாகவே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. லோகநாதம் 1989-ல் ஜூனியர் அசிஸ்டெண்டாக  பணியில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து தற்போது கோயில் துணை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். நெல்லூர் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் வழங்கிய வாரண்டின் அடிப்படையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.