Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Leader
search-icon-img
Advertisement

ராகுலின் பேச்சு பொய்கள் நிறைந்தது: அவைக் குறிப்பிலிருந்து நீக்க திட்டம்; ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில்

புதுடெல்லி: நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு பொய்களால் நிறைந்தது. அவர் பொய் சொன்னதால் அவற்றை அங்கீகரிக்க முடியாது. பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மீது எந்த நோட்டீசும் கொடுக்காமல் ராகுல் காந்தி பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தார். இது கடுமையான உரிமை மீறல். எனவே ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளின் அங்கீகாரத்தை கோரி ஆளும் கூட்டணி கட்சி எம்பிக்கள் அவைத்தலைவரிடம் நோட்டீஸ் வழங்குவார்கள்.

பிரதமருக்கும், பாதுகாப்பு அமைச்சருக்கும், ராணுவ தளபதிக்கும் இடையே நடந்த உரையாடல்களை பொதுவில் விவாதிக்க முடியாது. எல்லாவற்றையும் பொதுவில் விவாதிக்க வேண்டும் என்றால் நாட்டின் பாதுகாப்பை எவ்வாறு பராமரிக்க முடியும்? நாட்டின் பாதுகாப்பு தொடர்பான மிகவும் முக்கிய விஷயத்தை அரசியல் ஆதாயத்திற்காக ஒரு கருவியாக பயன்படுத்த ஒரு எம்பி எவ்வாறு முயற்சிக்கிறார் என்பதை முழு நாடும் பார்க்கிறது. ராகுல் காந்தி தான் ஒரு கவுரவமான நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அவர் இந்த நாட்டு மக்களுக்கு குறிப்பிட்ட பொறுப்புக்கு கடமைப்பட்டுள்ளார். அவையின் கண்ணியத்தை பேண வேண்டிய கடமை அவருக்கு உள்ளது. நாட்டின் நலனைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். ஆனால் ராகுல் காந்திக்கு பிரச்னைகளை புரிய வைப்பது கடினம். அவர் எந்த உலகில் வாழ்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் நீங்கள் குழந்தையை போல நடந்து கொள்ளக் கூடாது. இந்த விஷயத்தில் ராகுல் காந்தி அம்பலப்படுத்தப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

* 20-25 காங். எம்பிக்கள் சூழ்ந்து அச்சுறுத்தினர்

கிரண் ரிஜிஜு கூறுகையில், ‘‘மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை அவரது அறையில் 20-25 காங்கிரஸ் எம்பிக்கள் சூழ்ந்து அச்சுறுத்தினர். அப்போது அங்கு இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கே.சி.வேணுகோபால், பிரியங்கா காந்தி ஆகியோர் அவர்களை தடுக்கவில்லை. அதற்கு பதிலாக சொந்த கட்சியினரை தூண்டி விட்டனர். பிர்லா மிகவும் வேதனை அடைந்தார். அவர் மென்மையானவர். இல்லையெனில் அவர் கடும் நடவடிக்கை எடுத்திருக்கலாம்’’ என்றார்.

* உலக வர்த்தக அமைப்பு முன்பு சரண் அடைந்தது காங். அரசு: நிர்மலா சீதாராமன் பதிலடி

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்து பேசியதாவது: வரி பகிர்வின் ஒருபகுதியாக 2027ஆம் நிதியாண்டில் ரூ.25.44 லட்சம் கோடியை மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும். நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.3 சதவீதம் அல்லது ரூ.16.95 லட்சம் கோடியாக இருக்கும். இந்தியாவை விற்கவோ அல்லது வாங்கவோ யாருக்கும் துணிச்சல் இல்லை. உண்மையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம்தான் உலக வர்த்தக அமைப்பின் முன் சரணடைந்து ஏழைகளையும் விவசாயிகளையும் விற்றது. பிரதமர் மோடி எப்போதும் இந்திய நலனுக்காகவே பேசுவார். இவ்வாறு பதில் அளித்தார்.