புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் புதிய தேசிய தலைவராக நியமிக்கப்பட்ட ஹேமங் ஜோஷி டெல்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று முறைப்படி பொறுப்பேற்று கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹேமங் ஜோஷி, “மாணவர்கள், இளைஞர்களின் பிரச்னைகளை மையமாக வைத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சத்ரோ கி கூஞ்ச் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அவரது நிகழ்ச்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளுக்காகவே இளைஞர்கள் வருகிறார் என்பது அவருக்கும், அவரது குழுவினருக்கும் நன்றாக தெரியும்.
ராகுல் காந்தி பேசும் எந்தவொரு பிரச்னைக்கும், அவரிடம் என்ன தீர்வு உள்ளது என்பதை பற்றி அவர் ஒருபோதும் பேசியதில்லை. இந்துத்துவம், இந்திய தன்மை தொடர்பான ராகுல் காந்தியின் அறிவின் ஆழத்தை பார்த்து இளைஞர்கள் சிரிக்கிறார்கள். ராகுல் காந்தி முன்பு இளமையாக இருந்தபோது வயதானவராக தோற்றமளிக்க குர்தா பைஜாமா அணிந்திருந்தார் இப்போது வயதான நிலையில், இளமையாக காட்டி கொள்ள டி ஷர்ட், ஜீன்ஸ் அணிகிறார்” என தெரிவித்துள்ளார்.



