ராகுல் காந்திக்கு பாஜக எம்பி பதிலடி..! வெளிநாட்டு சக்திகளை கொண்டு நாட்டின் வளர்ச்சியை நிறுத்த முயற்சிப்பதாக புகார்
டெல்லி: வெளிநாட்டு சக்திகள், வெளிநாட்டு நிதி, வெளிநாட்டு கூட்டாளிகள், வெளிநாட்டு எஜமானர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து இயக்கப்படும் டூல்கிட்ஸ்களின் உதவியுடன் இந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்க சில அரசியல் தலைவர்கள் முயல்வதாக பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டி உள்ளார்.
முன்னதாக டெல்லி பேரணியில் பேசிய ராகுல்காந்தி வாக்குத் திருட்டுப் புகார்கள் மற்றும் ஜனநாயகத்திற்கு எதிராகச் செயல்பட்ட காரணத்தால் ஞானேஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரால் இரவில் நிம்மதியாக உறங்க முடிவதில்லை என்று ராகுல் காந்தி விமர்சித்தார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அனுராக் தாக்கூர் இந்த விமர்சனங்களை முன்வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாக்கூர், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசை, நாட்டு மக்கள் தொடர்ந்து மூன்று முறை தேர்ந்தெடுத்துள்ளனர். மோடி தலைமையிலான அரசு, இந்தியாவின் பொருளாதாரத்தை 11-வது இடத்திலிருந்து 4-வது இடத்திற்கு வெற்றிகரமாக உயர்த்தியுள்ளது. ஆனால் இன்று, சில தலைவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையரை விமர்சிப்பது என்பது அவர்களுக்கு ஒரு சாக்கு மட்டுமே; உண்மையில், ஆட்சியை மாற்ற துடிக்கும் இவர்களின் உண்மையான முகமும், தீய நோக்கங்களும் மக்கள் முன் எப்போதோ அம்பலமாகிவிட்டன.
எதிர்க்கட்சிகள் தங்களின் சொந்த பலத்தால் ஜனநாயக முறைப்படி அரசுக்கு சவால் விடுக்க முடியாமல், வெளிநாட்டு சக்திகளின் உதவியை நாடுவதாக அவர் குற்றம் சாட்டினார். ஒருசில நாடுகளில் முறையற்ற வகையில் ஆட்சிமாற்றம் நடைபெற்றதை போலவே இங்கும் அதுபோன்ற சம்பவங்களை நிகழ்த்த சிலர் துடிக்கின்றனர். தவறான தகவல்கள் மற்றும் வெளிப்புற சக்திகளை பயன்படுத்தி இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அவர்கள் முயல்கின்றனர். இந்தியாவில் இத்தகைய முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை என்று குறிப்பிட்டார்.


