இந்தியாவில் விளையும் உணவு தானியங்களில் கேழ்வரகுக்கென்று ஒரு தனித்த பெருமை இருக்கிறது. அரிசி மற்றும் கோதுமையை விட ஊட்டச்சத்துகள் அதிகளவில் மிகுந்த இந்தக் கேழ்வரகில் புராலமின், குளுட்டனின் மற்றும் உடலுக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் கேழ்வரகில் நிறைந்திருக்கின்றன. நார்ச்சத்து, பைட்டேட் மற்றும் பி வைட்டமின் நிறைந்த கேழ்வரகினை முளைகட்டி குழந்தைகளுக்கு மால்ட் தயார் செய்யும் முறை பழங்காலந்தொட்டு நம் பழக்கத்தில் இருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பருவங்களில் வளர்ந்து வரும் இப்பயிரை லாபகரமாக சாகுபடி செய்யும் முறை குறித்து விளக்குகிறார் மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முருகேசன்.கேழ்வரகு மானாவாரி பயிராகவும், இறவையிலும் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் ஜூன் மற்றும் ஜூலையில் மாதங்களில் இதை சாகுபடி செய்யலாம். மானாவாரியில் பயிரிட பையூர் 1, கோ 13, கோ.ஆர்.ஏ 14, பையூர் 2 ஆகியவை ஏற்ற ரகங்கள். 450 முதல் 500 மிமீ சராசரி மழை கேழ்வரகிற்கு போதுமானது.
நிலம் தயாரிப்பு
கேழ்வரகு சாகுபடி செய்ய தேர்ந்தெடுக்கும் நிலத்தை, பயிரிடுவதற்கு முன்பே கோடை உழவு செய்து, ஈரப்பதத்தை சேமிக்க வேண்டும். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இறக்கை கலப்பை கொண்டு ஒருமுறை ஆழமாக உழுவதும், இரண்டு முறை நாட்டு மரக்கலப்பை கொண்டு உழவு செய்வதும் அவசியம். கொத்துக் கலப்பை அல்லது பலபல் கொண்ட கொத்து கொண்டு நல்ல மென்மையான விதைப்பாத்திகளை விதைப்பிற்கு முன் தயார் செய்ய வேண்டும்.
விதைப்பு
நல்ல மகசூல் பெறுவதற்கு, ஒரு எக்டருக்கு 4 முதல் 5 லட்சம் பயிர் எண்ணிக்கை அவசியம். இதற்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ பயிர் எண்ணிக்கை இருந்தால் மகசூல் குறையும். கேழ்வரகு சாகுபடியில் பலமுறைகள் உள்ளன. வரிசைக்கு வரிசை 22.5 - 30 செ.மீ இடைவெளி கொடுக்க வேண்டும். கேழ்வரகு விதைகள் மிகவும் சிறியதாக இருப்பதால் ஒரு ஹெக்டருக்கு 15 முதல் 20 கிலோ விதைகள் தேவைப்படும். விதையிடும் கருவியைப் பயன்படுத்தி, செடிக்கு செடி 7.5 முதல் 10 செ.மீ இடைவெளி விட்டு விதைக்க வேண்டும். விதையிடும் கருவி மூலம் வரிசை விதைப்பில் விதையுடன் உரமும் சேர்த்து அளிப்பதால் ஊட்டச்சத்துகள் பயன்பாடு செடிக்கு திறம்பட கிடைக்கிறது. மானாவாரி பயிரில் அதிக மகசூல் பெற சரியான அளவு பயிர் எண்ணிக்கை பராமரிக்க வேண்டும். குறைவான மழையளவு உள்ள பகுதிகளில், விதைப்பிற்கு பின் தேவையான அளவு ஈரம் இல்லாமல் இருந்தால், முளைப்புத்திறன் பாதிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் விதை கடினமாக்குதல் முறையை பின்பற்றினால் முளைப்புத்திறன் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நாற்றுகளுக்கு வீரியம் உண்டாவதுடன், வறட்சியைத் தாங்கும் திறனும் ஏற்படுகிறது.
விதைகளை கடினமாக்குதல்
1 கிலோ விதைக்கு 1 லிட்டர் தண்ணீர் வீதம் விதைகளை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். தண்ணீரை வடித்துவிட்டு விதைகளை ஈரத்துணியில் 2 நாட்கள் கட்டி வைக்க வேண்டும். இந்த நிலையில் விதைகள் முளைக்கத் துவங்கிவிடும். ஈரத்துணியிலிருந்து விதைகளை அகற்றி பின்னர் உலர்ந்த துணியில் 2 நாட்கள் நிழலில் உலர வைக்க வேண்டும். இவ்வாறு கடினமாக்கப்பட்ட விதைகளை விதைப்பிற்கு பயன்படுத்த வேண்டும்.
பயிர் சுழற்சி
பச்சைப்பயறு, உளுந்து, கொள்ளு, சோயாபீன், மொச்சை அல்லது வேர்கடலை பயிர்களுடன் கேழ்வரகை பயிர் சுழற்சி முறையில் பயிரிடலாம். இவ்வாறு பயிரிடும்போது வளிமண்டல தழைச்சத்து மண்ணில் நிலைநிறுத்தப்படுகிறது. இதனால் ரசாயன உரங்களின் தேவை குறைவதுடன் அதிக விளைச்சல் கிடைக்கிறது.
விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு
தமிழ்நாடு அரசு சார்பில் வேளாண்துறையில் விவசாயிகளுக்கு பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, துவரை, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள் உள்ளிட்ட 11 பயிர்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்படுகிறது. அதாவது மேற்கண்ட பயிர்களை மாநில அளவில் அதிக உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சம் என தலா 3 பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்தப் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் விவசாயிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம்.


