Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

20வது நிமிடத்தில் இருந்தே பலன்கள் கிடைக்கும்; புகை பிடிப்பதை கைவிடுவதால் 50 நோய்களின் அபாயம் குறையும்: சர்வதேச ஆய்வுகளில் புதிய தகவல்

‘புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு. புகை நமக்கு பகை’ என்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் திரும்பிய திசையெல்லாம் தென்படுகிறது. ஆனாலும் புகைபிடிக்கும் பழக்கம் என்பது தலைமுறைகள் கடந்து இன்றளவும் மக்களிடையே தொடர்கிறது. உலகளாவிய ஆய்வுகளின் படி, புகை பிடிப்போர் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தோனேஷியா (70.5 சதவீதம்) முதலிடம் பிடித்துள்ளது. மியான்மர் (70.2 சதவீதம்) 2வது இடத்திலும், பங்களாதேஷ் (60.6 சதவீதம்) 3வது இடத்திலும் உள்ளது. சீனா இதற்கடுத்த இடத்தில் உள்ளது. இந்தியாவில் 42 சதவீதம் ஆண்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை கொண்டவர்களாக உள்ளனர்.

ஆண்கள் அதிகளவில் புகை பிடிக்கும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 13வது இடத்தில் உள்ளது. இந்த புகை பிடிக்கும் பழக்கம் என்பது மனித குலத்திற்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து உலக சுகாதார மேம்பாட்டு அமைப்புகள் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. ஆனாலும் புகை பிடிப்பதற்கான ஆர்வம் மக்களிடம் குறைந்தபாடில்லை. இது ஒரு புறமிருக்க, புகை பிடிப்பதை கைவிட்டால் 20வது நிமிடத்தில் இருந்தே ஏராளமான பலன்கள் கிடைக்கும் என்று சமீபத்திய உலகளாவிய மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து சர்வதேச மருத்துவ ஆய்வு நிபுணர்கள் கூறியதாவது: நுரையீரல் புற்றுநோய், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், மாரடைப்பு, பக்கவாதம், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, மலட்டுத்தன்மை போன்ற அனைத்து பாதிப்புகளுக்கும் புகை பிடிப்பது ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இந்த புகையானது இதயநோய்கள், நீரிழிவுநோய் போன்றவற்றுக்கும் வழிவகுக்கிறது. ஆரோக்கியமானவர் களுக்கும் சுவாசப்பாதையில் நச்சுத்தன்மையை உருவாக்கி, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கிறது. மனிதர்கள் புகைப் பிடித்தலைக் கைவிட்ட 20வது நிமிடத்தில் இருந்தே உடலுக்கு ஏராளமான பலன்கள் கிடைக்கும்.

அடுத்த 48 மணிநேரத்திலேயே ரத்தத்தில் இருக்கும் கார்பன் மோனாக்ஸைடின் அளவு குறையும். இது கூடுதல் ஆற்றல் கிடைப்பதற்கு வழிவகுக்கும். அப்படியே கூடுதல் காலம் செல்லச் செல்ல புகைப் பிடிப்பதை கைவிடுவதால் 50 வகையான நோய்கள் வரும் அபாயம் குறைகிறது. இது ஆரோக்கியத்தை மேலும் அதிகரிக்கிறது. மேலும் புகை பிடிப்பதை கைவிடுவதால் மனிதர்களின் சுவாசம் இலகுவாகும். உணவின் சுவை கூட, அதிகமாக தெரியும். புகைப் பிடித்தலைக் கைவிடுவதால் அதிக பசியும் அதன் விளைவாக சிலருக்கு எடை கூடுவது போன்றவையும் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் சிறிது எடை கூடுவதால் ஏற்படும் பாதிப்பை விட, புகைப் பிடிப்பதால் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் அபாயம் அதிகம். எனவே புகைப் பிடிப்பதைக் கைவிட்ட பின்னர் கூடும் எடை, புகைப் பிடிப்பதைக் கைவிட்டதால் கிடைக்கும் பலன்களைப் பறித்துக் கொள்வதில்லை என்றும் ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளது. லோபோர்ரோ பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்ட ஆய்வு ஒன்றில் புகைப் பிடிக்காதவர்களைவிட புகைப் பிடிப்பவர்கள் உணவைத் தவிர்க்க இருமடங்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிய வந்தது. நிக்கோட்டினை கைவிடுவது கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு அதிகமுள்ள ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதற்கான தாகத்தை அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் காட்டுகின்றன.

நிக்கோட்டினை பயன்படுத்தும்போதும், ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்ளும்போதும் கிடைக்கும் இன்ப உணர்வுகள் மூளையின் பல்வேறு பகுதிகளில் ஒரே மாதிரியான உணர்வை ஏற்படுத்துவதற்கான ஆதாரங்களும் ஆய்வில் கிடைத்துள்ளது. எனவே இதை உணர்ந்து புகை பிடித்தலை கைவிடுவது அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகவும் நல்லது. இவ்வாறு ஆய்வு நிபுணர்கள் கூறினர்.

சிறந்த மாற்று சமச்சீர் உணவு

‘‘புகைப் பிடிக்கும் பழக்கமுள்ள சிலர், சூயிங்கம், சிகரெட், இ-சிகரெட் போன்ற ஏதாவது ஒன்றை வாயில் வைத்திருக்க வேண்டும் என்ற உந்துதலுடன் போராடிக் கொண்டிருப்பார்கள். நொறுக்குத் தீனி உண்டும் அந்த தேவையைப் பூர்த்தி செய்கின்றனர். இதனாலேயே நிக்கோட்டினுக்கு பதிலாக நொறுக்குத் தீனி உண்ணும் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இதை தவிர்க்க, ஆரோக்கியமான மாற்றுகள் மூலம் நம்மை பாதுகாத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக சமச்சீரான உணவை உட்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். சமச்சீரான உணவு உடலுக்கு அதிக ஊட்டத்தைத் தருவதுடன் பசி மற்றும் உடல் திறனைக் கட்டுக்குள் வைக்கவும் உதவும்,’’ என்பதும் மருத்துவ நிபுணர்கள் வழங்கியுள்ள அறிவுரை.

* மனிதர்கள்a புகைப் பிடித்தலைக் கைவிட்ட 20வது நிமிடத்தில் இருந்தே உடலுக்கு ஏராளமான பலன்கள் கிடைக்கும்.

* அடுத்த 48 மணிநேரத்திலேயே ரத்தத்தில் இருக்கும் கார்பன் மோனாக்ஸைடின் அளவு குறையும்.

* புகை பிடிப்பதை கைவிடுவதால் மனிதர்களின் சுவாசம் இலகுவாகும். உணவின் சுவை கூட, அதிகமாக தெரியும்.