*வற்றல் குழம்பு செய்யும்போது கடைசியாக சிறிது மஞ்சள் பொடியும், மிளகுப் பொடியும் கலந்தால் சுவையாக இருக்கும்.
*பாகற்காயை இரண்டாக வெட்டி வைத்து விட்டால் பழுக்காது. பசுமையாகவே இருக்கும்.
*சேனைக்கிழங்கை புளி நீரில் வேகவைத்து விட்டால் சாப்பிடும்போது பிய்க்காமல் இருக்கும்.
*குக்கரில் உள்ளே கறைபட்டிருந்தால் ஒரு பெரிய வெங்காயத்தை வெட்டி நன்கு தேய்த்தால் கறை காணாமல் போய்விடும்.
*பக்கோடா மாவை கலக்கும் போது சிறிதளவு நெய்யும் உப்பிட்ட தயிரும் கலந்து கொண்டால் பக்கோடா மொறு மொறுவென இருக்கும்.
*வெந்தய சூப் குடித்தால் உடல் நிலை வெப்பம் சம நிலையை அடையும்.
*வெண்டைக்காய் சூப் குடித்தால் நரம்புகள் வலிமை பெறும்.
*புளியை பானையில் போட்டு அதன் மேல் கொஞ்சம் உப்பை தூவி வைத்தால் விரைவில் கெடாது.
*குக்கரை உபயோகிக்கும் போது மேல் மூடியை எடுத்து சூடாக இருக்கும்போதே அதன் மேல் குளிர்ந்த நீரை ஊற்றினால் ரப்பர் வளையம் நீண்ட நாட்கள் உழைக்கும்.
*சமையல் பாத்திரம் அடியில் சோப்பைத்தடவி அடுப்பில் வைத்தால் பாத்திரத்தில் அதிகம் கறி பிடிக்காது.
- எஸ். சடையப்பன்.
ஆஹா மிளகு
கருப்பு மிளகு ‘மசாலாப் பொருட்களின் ராஜா’ என்று அழைக்கப்படுகிறது. இதில் உள்ள ‘பைபரின்’ (Piperine) என்ற காரத்தன்மை, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், செரிமானத்தை மேம்படுத்தி, உணவிலுள்ள ஊட்டச்சத்துக்களை உடல் எளிதாக உறிஞ்சவும் உதவுகிறது. பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்று கூறப்படுவதில் இருந்து மிளகின் மருத்துவ மகிமையை நாம் தெரிந்து கொள்ளலாம். நுரையீரல் சார்ந்த நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது மிளகு.
சளி, இருமல், தும்மல், மூக்கடைப்பு, சைனஸ், ஆஸ்துமா, விஷக்கடி, தொண்டை கரகரப்பை சீராக்கும் ஆற்றல் கொண்டது. உடலில் உள்ள நச்சுக்களை வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றி உடலைச் சுத்தப் படுத்துகிறது. நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, நினைவாற்றலை அதிகரிக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
- ஆ.ஜெயசீலிராணி.


