உலக அரசியலில் ஏதாவது ஒரு வகையில் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இப்போது துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மீண்டும் மக்கள் மன்றத்தில் பேசப்படுகிறார். டிரம்ப் அதிபரான நாளில் இருந்தே அமெரிக்காவில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. உலக நாடுகளின் நாட்டாமையாக தன்னை கருதிக்கொண்டு டிரம்ப் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள், அமெரிக்க மக்களுக்கும் பிடிக்கவில்லை.
பல நாடுகளும் அமெரிக்காவை கரித்து கொட்டுகின்றன. இந்நிலையில் இத்தகைய சம்பவங்கள் மூலம் அமெரிக்கா மீதான அனுதாபத்தை எழுப்புவதற்கு கட்டமைப்புகளும் நடக்கின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கொலை முயற்சிகள் பலமுறை நடந்திருக்கிறது. அமெரிக்காவின் வடக்கு டகோட்டாவில் கடந்த 2017ம் ஆண்டில் டிரம்பின் வாகன அணிவகுப்பு மீது போர்க்லிப்ட் வாகனத்தை மோதச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 2018 மற்றும் 2020-ல் ‘ரிசின்’ என்ற கொடிய விஷம் தடவப்பட்ட கடிதங்கள் டிரம்பிற்கு அனுப்பப்பட்டன.
கடந்த 2024ம் ஆண்டு பென்சில்வேனியாவின் பட்லர் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தின் போது, தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் (20) என்ற நபர், துப்பாக்கியால் 8 முறை சுட்டதில், டிரம்பின் வலது காதில் குண்டு பாய்ந்து காயமடைந்தார். டிரம்பைக் கொல்ல ஈரான் திட்டமிட்டதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியது. பின்னர், புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் டிரம்ப் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்த போது, ரையன் வெஸ்லி ரௌத் (58) என்ற நபர் துப்பாக்கியுடன் புதருக்குள் பதுங்கியிருந்ததை ரகசிய போலீசார் கண்டுபிடித்தனர்.
கடந்த அக்டோபர் மாதம், டிரம்பின் ஏர்போர்ஸ் ஒன் விமானம் நிறுத்தப்படும் இடத்தைக் குறிவைத்து வேட்டை மேடை அமைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவங்களில் எல்லாம் டிரம்ப் உயிர் தப்பியதோடு, அமெரிக்காவுக்காக, தனது உயிரையும் துச்சமாக கொண்டு செயல்படுவதை நிரூபித்து காட்டியுள்ளார். ஈரான் உச்சதலைவர் காமேனி கொல்லப்பட்டதற்கு பழிவாங்க, டிரம்பை கொலை செய்ய ஈரான் அரசு ரகசிய திட்டம் தீட்டி வருவதாக உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இந்நிலையில், வாஷிங்டன் ஹில்டன் ஓட்டலில் நடந்த சமீபத்திய இரவு விருந்து நிகழ்ச்சியும் அதை உறுதி செய்துள்ளது. பத்திரிகையாளர்கள் அனைவரும் கூடியுள்ள ஒரு நிகழ்வில் டிரம்பின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதை வெளிக்காட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 2011ம் ஆண்டுக்கு பிறகு வெள்ளை மாளிகையில் அவர் பத்திரிக்கையாளர்களுக்கான இரவு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நிகழ்ச்சி நடக்கும்போதே திடீரென எழுந்த துப்பாக்கி சப்தம் காரணமாக பாதுகாப்பு அதிகாரிகள் அவரையும், அவரது மனைவி மெலனியா டிரம்பையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். அதிர்ஷ்டவசமாக இந்த துப்பாக்கி சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட நாளில் இருந்தே, பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் அதிபருக்கே அங்கு பாதுகாப்பு இல்லை என்பது போன்ற சம்பவங்களும் அங்கு அடிக்கடி அரங்கேறி வருகின்றன. இந்த சம்பவம் ஈரான் மோதலுடன் தொடர்புடையதாக இருக்க வாய்ப்பில்லை என அதிபர் டிரம்ப் கூறியிருப்பதும், சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்திருப்பதும் நம்மால் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றாகும். உலக அரசியல் இப்போதும் அமெரிக்காவை சுற்றியே நகர்கிறது என்பதை உணர முடிகிறது.
