புழுதிவாக்கத்தில் வாகனம் மோதி மின்கம்பம் முறிந்தது: அந்தரத்தில் நிற்கும் அவலம்
ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி, பெருங்குடி 14வது மண்டலம், 186வது வார்டுக்கு உட்பட்ட ராமலிங்க நகர் பிரதான சாலையில் உள்ள ஒரு மின்கம்பத்தின்மீது வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், அந்த மின்கம்ப அடிப்பகுதியின் ஒரு பகுதி முற்றிலும் உடைந்து சுக்குநூறாக நொறுங்கியது. அக்கம்பத்தில் இருந்த இரும்பு கம்பிகளும் வளைந்துள்ளது. இதனால் அந்த கம்பம் மின்கம்பிகளின் உதவியுடன் நேராக நிற்பதை போல் காட்சியளிக்கிறது. எனினும், அந்த மின்கம்பம் அந்தரத்தில் நிற்பதை போல், எந்நேரத்திலும் முறிந்து கீழே விழும் அபாயநிலையில் உள்ளது.
இந்த மின்கம்பத்தின் அடிப்பாகம் முற்றிலும் உடைந்ததால், அப்பகுதியில் ஒரு பேஸ் மின்சாரம் தடைப்பட்டு உள்ளது. இதுகுறித்து அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், மடிப்பாக்கம் மின்வாரிய உதவி பொறியாளரிடம் புகார் அளித்தனர். அந்த மின்கம்பத்தை மாற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். எனினும், அடிப்பாகம் முற்றிலும் சேதமடைந்த மின்கம்பம் இதுவரை மாற்றி அமைக்கப்படவில்லை. தற்போது இப்பகுதியில் லூப்லைன் மூலம் தடைபட்ட ஒரு பேஸ் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
எனினும், ராமலிங்கம் நகர் பிரதான சாலையில் உள்ள பல்வேறு தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் லிப்ட் போன்றவை வேலை செய்யாமல் இருப்பதால், அங்கு வசிக்கும் முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்றி சீரமைக்கவில்லை என்றால், அங்குள்ள அனைத்து மின்கம்பிகளும் அறுந்து கீழே விழும் அபாயநிலை உள்ளது. எனவே, இப்பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உடைந்து போன மின்கம்பத்தை உடனடியாக மாற்றி சீரமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.