புழல்: சென்னை புழல் மகளிர் சிறை அருகில் உள்ள சென்னை பெருநகர குடிநீர் வாரிய வளாகத்தில் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு, அங்கிருந்து பூமிக்கு அடியே பைப்லைன் மூலமாக ஜிஎன்டி சாலை, மாதவரம் 200 அடி சாலை வழியே மாதவரம், மணலி, மாத்தூர், கீழ்ப்பாக்கம் உள்பட பல்வேறு சென்னை நகரப் பகுதிகளில் நாள்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், புழல் மகளிர் சிறை அருகே ஜிஎன்டி சாலையில் நேற்று நள்ளிரவு பூமிக்கு அடியே புதைக்கப்பட்டு இருந்த குடிநீர் குழாய் திடீரென அழுத்தம் அதிகரிப்பால் வெடித்து சிதறியது. இதனால் புழல் மகளிர் சிறை அருகே ஜிஎன்டி சாலை பகுதியில் சுமார் 15 அடி ஆழத்துக்கு ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அப்பள்ளத்திலிருந்து அதிகளவு குடிநீர் வீணாக வெளியேறி, அங்குள்ள புழல் சர்வீஸ் சாலை வழியே எம்.ஜி.ஆர் நகர் 5 மற்றும் 6வது தெரு பகுதிகளில் வெள்ளமாக புகுந்து தேங்கி நிற்கிறது. மேலும், புழல் ஜிஎன்டி நெடுஞ்சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டதால், இன்று காலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் சென்னை பெருநகர குடிநீர் வாரிய அதிகாரிகளும் ஊழியர்களும் விரைந்து வந்தனர். அப்பகுதியில் சென்னைக்கு வரும் குடிநீர் பைப்லைன் இணைப்பை தடுத்து நிறுத்தி, சாலையின் இருபக்கங்களில் தடுப்புகள் அமைத்து, வெடித்து சிதறிய ராட்சத பைப்லைன்களை மாற்றி சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க மாதவரம் போக்குவரத்து பிரிவு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

