Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

புழல் சிறையில் 2வது முறையாக அன்பில் மகேஷை சந்தித்தார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி: சட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுடன், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் 2வது முறையாக நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு சென்றிருந்தார். 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷுடன் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து, சிறை வாயிலில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:

கே.என்.நேரு வீட்டில் தொடர்ந்து சோதனை நடத்தி மிரட்டி பார்க்கிறார்கள், பல காட்டாறுகளை கடந்து வந்த இயக்கம் திமுக. இந்த, பண மோசடி வழக்கினை அன்பில் மகேஷ் சட்ட ரீதியாக எதிர்கொள்வார். கட்சியும், தலைவரும் அவருக்கு உறுதுணையாக இருக்கும். மிரட்டல், உருட்டல், பழிவாங்கும் நடவடிக்கை, இதனால் திமுகவின் மக்கள் சார்ந்த பணிகளையும், இயக்கத்தின் கொள்கையில் ஒரு நாளும் மங்க செய்ய முடியாது, இன்னும் கூர்மையாக தான் இருக்கும். நெருக்கடி ஆற்றில் நீந்தி வந்த இயக்கம் தான் திமுக, இதைப்பற்றி கவலைப்பட மாட்டோம்.

இந்த ஆட்சியின் அவலங்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சி மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை விட்டுவிட்டு திமுகவை மிரட்டுகின்ற தொனியில் வழக்குகள், சோதனைகளை அன்றாடம் செய்து கொண்டிருக்கிறது. நாட்டில் நடக்கும் கொடுமைகளை மறைப்பதற்காக இப்படி செய்கிறார்கள், யாரையாவது கைது செய்கிறபோது யாரும் செல்லக்கூடாது என்பதையும் ஒரு மிரட்டலாக பார்க்கிறோம்.

நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள், சட்டத்தின் ஆட்சி நடத்தியது திமுக ஆட்சி. தற்போது சைத்தான் ஆட்சி நடப்பதால் இப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டுள்ளது. வேலூர் திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அவருக்கு ஜாமீன் மாத்திரம் கொடுக்கவில்லை, நீதிமன்றம் ஒரு குட்டை வைத்திருக்கிறது என்றும், கைது நடவடிக்கைக்கு அவசர கோலத்தில் அப்படி என்ன ஒரு கோலம் என்று நேற்றே சொந்த ஜாமீனில் விடுவித்து இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.