புழல் காவாங்கரை தனியார் மீன் மார்க்கெட்டால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
புழல்: சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, புழல் காவாங்கரை பகுதியில் தனியார் மீன் மார்க்கெட் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு புழல், மாதவரம், மூலக்கடை, பெரம்பூர், கொளத்தூர், செங்குன்றம், பாடியநல்லூர், வடகரை, விளங்காடுப்பாக்கம், வடபெரும்பாக்கம், அலமாதி, பம்மதுகுளம், பொத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் தினசரி காலை நேரங்களில் புழல் காவாங்கரையில் உள்ள தனியார் மீன் மார்க்கெட்டுக்கு பொதுமக்களும், வியாபாரிகளும் வந்து மீன்களை வாங்கிக்கொண்டு செல்கின்றனர்.
இவர்களுக்கென்று மார்க்கெட்டிங் உள்ளே போதுமான வாகன வசதிகள் இல்லாததால், வாகனங்களில் குறிப்பாக மோட்டார் சைக்கிள், கார்களில் வருபவர்கள் மார்க்கெட்டில் நிறுத்தாமல் காவாங்கரையில் உள்ள சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மற்றும் சர்வீஸ் சாலைகளிலே நிறுத்தி விட்டு செல்வதால் காவாங்கரையில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் திசையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது.குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை புழலில் இருந்து செங்குன்றம் நோக்கிச் செல்லும் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலை கடந்து சென்று வருகின்றனர். மேலும் காவாங்கரை, கண்ணப்பசாமி நகர், திருமலை நகர், ஏக்கப் பிளாட் ஆகிய பகுதியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல காவாங்கரை சிக்னல் கடந்து செல்வதற்கு பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட புழல் போலீசார் மற்றும் மாதவரம் போக்குவரத்து போலீசார், உரிய நடவடிக்கை எடுத்து சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மற்றும் சர்வீஸ் சாலைகளில் வாகனங்களை நிறுத்தாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கவும், தனியார் மீன் மார்க்கெட் நிறுவனத்தினர் வாகனங்கள் நிறுத்த இடம் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். இவற்றை சரி செய்யவில்லை என்றால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு, சாலை போக்குவரத்து குறித்து வழக்கு ஒன்று தொடரப்படும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் மீன் வாங்க வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில்; மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்க வரும்போது, எங்களுடைய வாகனங்களை மார்க்கெட்டின் உள்ளே நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருந்த போதிலும் அங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய இடமில்லை. அதனால் நாங்கள் சாலைகளில் நிறுத்திவிட்டு உள்ளே சென்று மீன்களை வாங்கி வருகிறோம். ஒரு சில நேரங்களில் காலதாமதம் ஆனால் எங்களுடைய வாகனங்களை மர்ம நபர்கள் திருடிச்செல்லும் சூழ்நிலை நிலவுகிறது.
மீன் மார்க்கெட்டிலும் போதுமான கழிப்பிட வசதி இல்லாததாளும் வெளியே உள்ள சாலைகளின் ஓரங்களில் இயற்கை உபாதைகள் வெளியேற்றும் நிலை உருவாகியுள்ளது. மேலும் மீன் மார்க்கெட் அருகில் உள்ள சர்வீஸ் சாலையில் சிறு சிறு நடைப்பாதை, காய்கறி கடைகளும், மீன், நண்டு, இறால் போன்றவற்றை சுத்தம் செய்வதற்கு சர்வீஸ் சாலையை பயன்படுத்துவதால் சர்வீஸ் சாலையும் போக்குவரத்து நெரிசலில் தவிக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட மாதவரம் மண்டலம் 23வது வார்டு மாநகராட்சி அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து மார்க்கெட்டின் வெளியே கழிப்பிட வசதிகளை ஏற்பாடு செய்துவிடவும், போக்குவரத்து போலீசார் வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய இடங்களை செய்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சென்னை புழல் சிறை சாலையில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் திசையில் பல நேரங்களில் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் முகூர்த்தம் மற்றும் சிறப்பு நாட்களிலும் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் நின்று கடந்து செல்கிற சூழ்நிலை உள்ளது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றோம். எனவே, போக்குவரத்து நெரிசலை உடனுக்குடன் சரி செய்ய முக்கியமான நாட்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரை பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கூடுதலாக மாதவரம் போக்குவரத்து போலீசாரும், புழல் சட்ட ஒழுங்கு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். இதற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அகற்றப்படாத மின் கம்பங்கள்;
புழல் மத்திய சிறைச்சாலை அருகில் இருந்து செங்குன்றம் செல்லும் திசையில் சென்னை - கொல்கத்தா தேசிய சாலையில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட மின்சார கம்பங்களை அகற்றாமல் உள்ளதால், சாலை போடும் பணி முழுமை பெறாமல் உள்ளது. இதுகுறித்து புழல் மின்சார வாரிய அலுவலகத்தில் கேட்டதற்கு, சாலை பணியில் ஈடுபட்டுள்ள சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை துறையினர், சாலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றுவதற்கு உரிய கட்டணங்கள் செலுத்தாத காரணத்தால் அகற்றப்படாமல் உள்ளது. மின் கம்பங்கள் அகற்றுவதற்கு பணத்தை கட்டினால், உடனடியாக மின் கம்பங்கள் அகற்றப்படும் என தெரிவித்தனர். இதனால் இந்த பகுதியில் கூடுதலாக எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை;
தேசிய சாலையில் செல்லும் வாகனங்கள் காத்திருந்து செல்லாமல் சாலை போடாமல் உள்ள பகுதியில் செல்வதால் ஒரு மாதத்திற்கு முன்பு மாநகர பேருந்து இரண்டு மின்சாரக் கம்பங்கள் மோதி மின்சார கம்பங்கள் கீழே விழுந்து மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு புழல், காவாங்கரை, கன்னடபாளையம் போலீஸ் பகுதிகளில் 3 மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அவசர காலங்களில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் பல்வேறு புகார்களின்பேரில் அவசரமாக செல்ல வேண்டிய சட்ட ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு வருகிறது. மீன் மார்க்கெட் சர்வீஸ் சாலையில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் கீழே ஒருவர் ஆபத்தை உணராமல் நடைபாதை கடை நடத்தி வருகிறார். எனவே, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



