Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

புழலை தொடர்ந்து.... டாக்டர் நடேசன் சாலையில் காதலனுடன் கஞ்சா போதையில் இளம் பெண் வாகனங்களை மறித்து ஆபாசமாக பேசி ரகளை

சென்னை: புழலை தொடர்ந்து திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலையில் காதலனுடன் கஞ்சா போதையில் இளம் பெண் ஒருவர், வாகனங்களை வழிமறித்து ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து, போலீசார் இளம் பெண்ணை பிடித்து அவரது பெற்றோரை வரவழைத்து கடுமையாக எச்சரித்து எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர். சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலையில் நேற்று முன்தினம் இரவு இளம் பெண் ஒருவர் தனது காதலனுடன் உணவு சாப்பிட பாஸ்ட் புட் கடைக்கு வந்தார். போதையில் இருந்த அவர், சிக்கன் ரைஸ் கேட்டு காதல் ஜோடி சாப்பிட்டுள்ளனர். அப்போது சிக்கன் ரைஸ் சரியாக இல்லை என்று கடை ஊழியரிடம் போதையில் இருந்த இளம் பெண் தகராறு செய்தார். அதற்கு கடை ஊழியர், ‘காரம் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது.. போதையில் இருந்தால் எப்படி உணவு நன்றாக தெரியும் உனக்கு என்று கேட்டுள்ளார். அதற்கு இளம் பெண் ‘ஆபாசமாக பேசி’ கடை ஊழியரிடம் தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறியதும், டாக்டர் நடேசன் சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து நில்லுங்க... டா... என ஆபாசமாக பேசி, தனது கையால் அடித்தப்படி வாகனங்களை மறித்து தனது கால்களால் உதைத்தார். இதை பார்த்த வாகன ஓட்டிகள் ஐஸ்அவுஸ் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி பெண் காவலர் ஒருவர் வந்து போதையில் தகராறு செய்த இளம் பெண்ணை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்ற போது, அவரையும் ஆபாசமாக பேசி அடிக்க பாய்ந்தார். உடனே கடை ஊழியர் ஒருவர் தகராறு செய்த இளம் பெண்ணை தலையில் தட்டினர்.

ஆனாலும் அந்த பெண் போதையில் சாலையில் அங்கும் இங்கும் நடந்து பிரச்சனை செய்தார். ஒரு கட்டத்தில் உடன் வந்த அவரது காதலன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதை வாகன ஓட்டிகள் பலர் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். பின்னர் ஒருவழியாக போலீசார் பொது மக்கள் உதவியுடன் ஐஸ் அவுஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்த இளம் பெண் என்றும், இவர் தனது காதலனுடன் நேற்று முன்தினம் இரவு கஞ்சா அடித்துவிட்டு போதையில் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், இவர் தான் கடந்த வாரம் புழல் காவாங்கரை பகுதியில் போதையில் தனது தோழியுடன் வாகனங்களை வழிமறித்து தகராறு செய்தவர் என தெரியவந்தது.

அதைதொடர்ந்து, போலீசார் இளம் பெண் என்பதால் அவரது பெற்றோரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து கடுமையாக எச்சரித்ததுடன் அவர்களிடம் இனி இது போன்று சாலையில் நடக்க கூடாது என்றும், இனி இதுபோன்று தவறாக நடந்தால் கைது நடவடிக்கை பாயும் என் கடுமையாக எச்சரித்தது அனுப்பி வைத்தனர்.