Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகத்துவம் மிகுந்த புதுக்கோட்டை பலா!

பலா என்றால் பண்ருட்டி என்பது போல புதுக்கோட்டை எனவும் நாம் நிச்சயம் உச்சரிக்க வேண்டும். அந்தளவுக்கு புதுக்கோட்டை பலாவுக்கு ஒரு தனித்துவ சிறப்பு இருக்கிறது. இந்த சிறப்புகள் குறித்தும் அதன் சாகுபடி குறித்தும் ஏராளமாக அடுக்குகிறார் புதுக்கோட்டை கீரமங்களம் அருகே உள்ள செரியலூர் இனாம் கிராமத்தைச் சேர்ந்த குமாரவேல். தனது 10 ஏக்கர் நிலத்தில் பலாவை சாகுபடி செய்து ஆண்டுதோறும் நல்ல விளைச்சல் எடுத்து வருகிறார். மேலும் தமது விளைச்சலையும். மற்ற பலா விவசாயிகளின் விளைச்சலையும் ஒருங்கிணைத்து கீரமங்களம் பகுதியில் கடை விரித்து விற்பனையிலும் கலக்கி வருகிறார். தற்போது பலா மரங்களுக்கு கவாத்து பணிக்கான சீசன் என்பதால், அவரைச் சந்தித்து பலாமரப் பராமரிப்புகள் குறித்து கேட்டோம்.

``புதுக்கோட்டையில் வடகாடு, மாங்காடு, கைகாட்டி, கீரமங்களம், பனங்குளம் உள்ளிட்ட கிராமங்கள் செம்மண் நிலம் கொண்டவை. இங்குதான் பலாமரங்கள் வளமாக வளரும். மற்ற ஊர்களில் பலா வளர்ந்தாலும் இங்கு விளையும் பலாவுக்கு ருசி அதிகம். நல்ல சுவை, நல்ல நிறம் கொண்டிருக்கும் இந்தப் பகுதி பலா முழுக்க முழுக்க நாட்டுப்பலா. அதனால்தான் இங்கு விளையும் பலா புதுக்கோட்டை பலா என்று பெருமையோடு அழைக்கப் படுகிறது. இந்தப் பகுதி புதுக்கோட்டை - தஞ்சை மாவட்டங்களின் எல்லைப் பகுதியாக விளங்குகிறது. இங்குள்ள இந்த மண் தன்மை மற்ற பகுதியில் இருக்காது’’ என தங்களின் மண் குறித்து பெருமிதத்தோடு பேச ஆரம்பித்த குமரவேலு, தங்களின் பலா சாகுபடி அனுபவம் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

`` பல தலைமுறைகளாக நாங்கள் பலா விவசாயத்தில் இருக்கிறோம்.இந்தப் பகுதியில் தென்னை நன்றாக வரும். நாங்கள் தென்னைக்கு நடுவில் ஊடுபயிராக பலாவை வைப்போம். ஆரம்பத்தில் கோகோ போன்ற பயிர்களை இங்கு வைத்து பார்த்தோம். எலித்தொல்லை, அணில் தொல்லை அதிகம் இருப்பதால் அந்த பயிரை நாங்கள் முறையாக சாகுபடி செய்ய முடிவதில்லை. அதனால் வழக்கம்போல பலாவையே சாகுபடி செய்கிறோம். வயல்களில் பிரதான பயிராகவும் பலாவை வைக்கிறோம். எங்களுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில், 5 ஏக்கரில் தென்னைக்கு ஊடுபயிராக பலா வைத்திருக்கிறோம். மற்றொரு 5 ஏக்கரில் பிரதான பயிராக பலாவை வைத்திருக்கிறோம். எங்களுடைய முந்தைய சாகுபடியில் இருந்து நல்ல தரமான பழங்களின் விதைகளைத் தேர்ந்தெடுத்து முளைக்க வைப்போம். அதை புதிய கன்றுகளாக்கி சாகுபடியைத் தொடங்குவோம். பலாவை பிரதான பயிராக சாகுபடி செய்கையில் 12.5 அடி இடைவெளிகளில் ஒரு கன்று என ஊன்றுவோம். நடவுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக இரண்டரை அடி அளவுகளில் குழியெடுத்து அதில் குப்பை எருவைக் கொட்டி வைப்போம். இந்த எருவை சுமார் 1 மாதத்திற்கு ஆற விடுவோம். பின்பு கன்றுகளை ஊன்றி மேல்மண் நிரப்புவோம்.

பலாவுக்கு 15 மாதத்திற்கு ஒருமுறை பாசனம் செய்தால் போதும். 2 வருடம் வரை உரம் எதுவும் தேவைப்படாது. அதற்கு மேல் குப்பை எருவை போடலாம். நாங்கள் பெரும்பாலும் மேலும் எதுவும் போடுவது இல்லை. கன்று நட்ட 5வது ஆண்டில் அறுவடை எடுக்க ஆரம்பிக்கலாம். 5வது ஆண்டில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கவாத்து பணியை மேற்கொள்வோம். அதாவது தேவையில்லாத கிளைகளை அகற்றுவோம். ஜனவரி மாதத்தில் பிஞ்சு வைக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் அதிகமாக வரும் பிஞ்சுகளை வெட்டி விடுவோம். ஒரு இடத்தில் ஒரு பிஞ்சு மட்டும் இருப்பது போல் பார்த்துக்கொள்வோம். அப்போதுதான் அந்த பிஞ்சு நல்ல தரமான பழமாக வளரும். நாம் இதுபோல் பிஞ்சுகளை வெட்டி விடுவதால் வேறு இடங்களில் புதிதாக பிஞ்சு வைக்கும்.

முதல் ஆண்டில் 10 பிஞ்சுகள் வரை விடலாம். 10 ஆண்டுகளுக்கு மேல் மரத்திற்கு 10 பிஞ்சுகளை விடலாம். பின்பு பிஞ்சுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யலாம். பிஞ்சு விடும் நேரத்தில் வண்ணத்துப்பூச்சி போன்ற ஒருவித பூச்சி மரத்தின் பட்டைகளில் அமர்ந்து முட்டையிடும். அதில் இருந்து வரும் பூச்சிகள் காய்களை அரித்து சேதப்படுத்தும். இதைக் கட்டுப்படுத்த மானாகுரோட்டபாஸ் மருந்தை மரத்தின் பட்டைகளில் தெளிப்போம். பலாவில் இதுபோன்ற ஒருசில பணிகள்தான் செய்வோம். ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதங் களில் பழங்களில் அறுவடைக்குத் தயாராகும். தொடர்ந்து மே, ஜூன், ஜூலை மாதங்கள் வரை அறுவடை எடுக்கலாம். மரத்திற்கு 10 காய் வந்தாலே நல்ல காய்ப்புதான். ஆனால் அதற்கும் கூடுதலாகவே காய்கள் வரும். ஒரு காய் 7 முதல் 30 கிலோ எடை கொண்டதாக இருக்கும். சராசரியாக 15 கிலோ எடை இருக்கும். அதற்கு அந்தந்த சீசனைப் பொருத்து விலை இருக்கும். எப்படி பார்த்தாலும் ஒரு மரத்தில் இருந்து ரூ.4 ஆயிரம் வரை பழங்கள் மூலம் வருமானம் கிடைக்கும். மரத்தின் எண்ணிக்கையைப் பொருத்து வருமானத்தின் அளவு இருக்கும்’’ என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

தொடர்புக்கு:

குமாரவேல்: 96291 58757.